பெருமிழலைக் குறும்ப நாயனார்

சோழ நாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலையின் தலைவராய் விளங்கிய பெருமிழலைக் குறம்பர். இவர் சிவனடியார்களுக்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர். நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திகளின் திருவடிகளைத் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனத்தால் நினைத்து போற்றுதலைக் கடமையாகக் கொண்டவர். நம்பியாரூர் திருப்பெயரினை நாளும் நவின்ற நலத்தாலே அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்றவர். “சுந்தரர் நாளைய தினம் திருக்கயிலாயத்தை அடைவார்” என்பதனை யோக சித்தியாலே முதல்நாளே உணர்ந்து கொண்ட பெருமிழலைக்குறும்பர் “நாளை அவர் கயிலையினை அடையக் கண்ணின் கரிய மணியினை இழந்தார் போல வாழமாட்டேன்” என்று எண்ணி “இன்றே யோகநெறியால் சிவன் தாள் சென்றடைவேன்” என்று சொல்லி நாற்கரணங்களும் ஒரு நெறப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு பிரமநாடியின் வழியே கருத்தைச் செலுத்தி யோக முயற்சியினாலே பிரமரந்திரம் திறப்ப உடலினின்றும் பிரிந்து கயிலைப் பெருமான் தருவடியினை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்