காரைக்காலம்மையார்

     சோழநாட்டில் கடற்றுறைப் பட்டினங்களுள் ஒன்றாகிய காரைக்காலில் தனதத்தனார் என்ற வணிகர் குலத் தலைவருக்கு பெண் குழந்தை பிறந்தது. புனிதவதி என்னும் பெயருடைய அப்பெண் விளையாடும் பருவத்திலேயே சிவ பக்தியுடன் வளர்ந்தது.

தனதத்தனார் தன் மகள் புனிதவதியாரை நாகையில் வாழ்ந்த நிதிபதிமைந்தன் பரமதத்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் இருவரும் காரைக்காலில் தனி வீட்டில் வாழவும், பரமதத்தன் தனக்குரிய வணிகம் புரிந்து வளம் பெறவும் வசதி செய்திருந்தார்.

ஒரு நாள் பரமதத்தனைக் காண வந்தோர் அவனிடம் மாங்கனிகள் இரண்டினைக் கொடுத்தார்கள். அவன் அவ்விரண்டினையும் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிவைத்தான். அந்நிலையில் சிவனடியார் ஒருவர் பசியால் வர, அவருக்கு ஒரு மாங்கனியை உண்ண கொடுத்தார் புனிதவதியார்.

அதன்பின் கணவனார்க்கு அமுது படைக்கும் போது மற்றொரு கனியைப் படைத்தார். அக்கனியின் இன்சுவை மிகுதியால் பரமதத்தன் “இன்னும் ஒன்றுளது” அதனைக் கொண்டு வந்திடுக என்றான். கணவனார்க்கு மாங்கனியில் ஏற்பட்ட ஆர்வத்தைத் தடுக்க எண்ணாத புனிதவதியார் உள்ளே சென்று இறைவனை வேண்டி அவனருளால் மற்றொரு மாங்கனியைக் கொணர்ந்து கணவனுக்குப் படைத்தாள்.

அதன் அதிமரச் சுவையை பருகிய  பரமதத்தன் “இது முன்தந்த மாங்கனியன்று இதனை வேறு எங்குப் பெற்றது?” என் வினவினான். அது கேட்ட புனிதவதியார் நடந்தபடி சொல்லுவதே முறை என்று நிகழந்ததைக் கூறினார். “இக்கனி இறையருளால் பெற்றதனால் இது போல் இன்னுமொரு கனி பெற்றுத் தருக” என்றான் பரமதத்தன். புனிதவதியாரும் இறைவனை வேண்டி “இன்னும் ஒரு கனி அளிக்கவில்லை என்றால் நான் கூறியது பொய்யாகிவிடுமே” என்று வருந்தினார். இறையருளால் மற்றுமொரு மாங்கனி பெற்றுக் கணவன் கையில் கொடுக்க அது உண்ணப் புகுமுன் மறைந்துவிட்டது.

அது கண்டு அதிசயித்த பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வமென அஞ்சி கடல் கடந்து வெளிநாடு சென்று பொருள் ஈட்டி வருவதாக் கூறிப் பிரிந்து சென்றான். பொருள் ஈட்டி மற்றொரு பெண்ணை மணந்து பாண்டி நாட்டுக் கடற்றுறைப் பட்டினமொன்றில் வாழ்ந்திருந்தான்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட தனதத்தனார் தம் மகள் புனிதவதியாரைப் பரமதத்தன் இருக்கும் ஊருக்கு பெரியவர் துணையுடன் அனுப்பிவைத்தார். புனிதவதியார் வருகையை அறிந்த பரமதத்தன் தானும் இரண்டாம் தராமாக மணந்து கொண்ட மனைவியோடும் அவள் பெற்ற பெண் குழந்தையோடும் வந்து எதிர்கொண்டு வணங்கினான்.

அது கண்ட புனிதவதியார் இறைவனருளால் அற்புதத் திருவந்தாதிப் பாடித் தம் உடலின் தசையினை உதறி என்புடம்பு தாங்கிப் பேய் உருவம் உடையவராய், தலையாலேயே நடந்து திருக்கலையை அடைந்தார். கயிலைப் பெருமான் இவரைக் கண்டு “அம்மையே” என அழைத்தார். அம்மையாரும் “அப்பா” என்று அன்பினால் பணிந்து வேண்டினார். இறைவன் அருளிய வண்ணம் தொண்டை நாட்டுத் திருவலங்காட்டினை அடைந்து அங்கு அண்டமுறை நிமிர்ந்தாடும் கூத்தப்பெருமானை மூத்த திருப்பதிகங்களால் பாடிப் போற்றி அம்முதல்வன் எடுத்தருளும் சேவடின்கீழ் என்றும் இருக்கும் பேரின்ப நிலையினைப் பெற்றார்.

திருச்சிற்றம்பலம்