அப்பூதியடிகள் நாயனார்

சோழநாட்டில் திங்களுரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் அப்பூதியடிகள். சிவபெருமான் மீது பேரன்பு உடைவர். திருநாவுக்கரசரைக் காணுதற்கு முன்னமே அவர் மீது அளவுகடந்த அன்புடையவர். திருநாவுக்கரசரின் திருப்பெயரையே தம் பிள்ளைகள் முதலியோர்க்கு வைத்து அழைத்தார். திருநாவுக்கரசர் திருப்பெயரால் தண்ணீர்ப் பந்தல், திருமடம் முதலிய நல்லறங்களைச் செய்து வந்தார்.

திருநாவுக்கரசர் திருப்பழனம் என்னும் தலத்தை வணங்கும் பொருட்டுத் திங்களுரை அடைந்தார். தம் பெயரால் தண்ணீர் பந்தல் இருப்பதைக் கண்டு அதனை அமைத்தவர் யார் என வினவி அப்பூதியடிகள் இல்லத்தை அடைந்தார். “சிவனடியார் பொருட்டு நீர் வைத்த தண்ணீர் பந்தலுக்கு தன் பெயரை எழுதாது வேறு ஒருவரின் பெயரை எழுதவேண்டிய காரணம் யாது?” என வினவினார். அது கேட்ட அப்பூதியடிகள் “கல்லே மிதப்பாகக் கொண்டு கடல் கடந்த நாவுக்கரசின் பெருமையை அறியாதார் யார்? சிவ வேடத்துடன் நின்று இவ்வாறு பேசும் நீர் யார்” என வெகுண்டு வினவினார்.

அப்பூதியடிகள் அன்பின் திறத்தை அறிந்த திருநாவுக்கரசர் “புறச்சமயச் சூழலிற்புக்குச் சூளை நோயினால் இறைவன் ஆட்கொள்ள அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாதேன் யான்” என்றார். அது கேட்ட அப்பூதியார் உரை தடுமாறி நிலமிசை வீழ்ந்து திருநாவுக்கரசரை வணங்கினார். தம் மனையில் அமுது உண்ண வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மூத்த திருநாவுக்கரசு என்ற அப்பூதியார் மைந்தன் அடியார்க்கு அமுது படைக்க வாழை இலை அரியச் சென்றவன் தன்னைப் பாம்பு தீண்டிய நிலையிலும் அதனை உதறி விரைந்து ஓடி வந்து வாழை இலையைத் தாயிடம் தந்து, கீழே வீழ்ந்து உயிர் நீத்தான். அடியார் அமுது உண்ணவேண்டுமே என்ற ஆர்வத்தால் இறந்த மைந்தனைப் பாயில் சுருட்டி ஒரு பக்கம் மறைத்து வைத்துவிட்டுத் திருநாவுக்கரசைப் பணிந்து திருவமுது செய்ய அழைத்தனர்.

தம்மை வணங்கிய எல்லோர்க்கும் திருநீறு அளித்த திருநாவுக்கரசர் உள்ளத்தே தடுமாற்றம் தோன்ற “மூத்த மைந்தன் எங்கே” என வினவினார். அது கேட்ட அப்பூதியார் “அவன் இங்கு இப்போது உதவான்” என்றார். “அவன் எங்கே, உண்மையைச் சொல்லும்” என நாவுக்கரசர் கேட்க, அப்பூதியார் நடுக்கமுற்று நடந்ததைக் கூறினார். உடனே திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசின் உடம்பினைக் கொணரக் செய்து “ஒன்றுகொலாம்” என்றும் திருப்பதிகம் பாடி விடந்தீர்த்து அருளினார்.

உயிர் பெற்றெழுந்த மூத்த திருநாவுக்கரசு திருநாவுக்கரசு நாயானார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். பின்பு அப்பூதியாரொடும் அவர்தம் மக்களோடும் திருநாவுக்கரசர் உடன் அமர்ந்து திருவமுது செய்தருளினார். திருப்பழனப் பெருமானைப் பரவிப் போற்றிய திருப்பதிகத்தில் “அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும், அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்” எனத் திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் சிவபக்தியினைச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு திருநாவுக்கரசர் திருவடிகளையே தமக்குரிய சார்பாக கொண்டு வாழ்ந்த அப்பூதியடிகளார் தில்லைமன்றுள் ஆடும் திருவடிகளை அடைந்து இன்புற்றார்.

திருச்சிற்றம்பலம்