நமிநந்தியடிகள் நாயனார்

இவர் சோழநாட்டில் ஏமப்போறூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். இவர்க்குப் பெற்றோறிட்ட பெயர் நம்பிநந்தி என்பதாகும். அதுவே நமிநந்தி எனத் திரிந்து வழங்கியது. நமிநந்தியடிகள் இரவும் பகலும் சிவபெருமானைப் பூசித்து மகிழும் சீலமுடையவர்.

இவர் ஒரு நாள் தருவாரூர் திருக்கோயிலை வழிபடச் சென்றார். அக்கோயிலின் ஒரு பக்கத்தே அரனெறி என்னும் கோயிலை மாலைக் காலத்தில் அடைந்த பொழுது அங்கு விளக்கில்லை. விளக்கேற்றி வழிபட எண்ணிய இவர், கோயின் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று விளக்கிற்கு எண்ணெய் கேட்டார். அவ்வீட்டார் சமண சமயத்தை சார்ந்தவர்கள். அவர்கள் நமிநந்தியாரை நோக்கி “தீயினைக் கையிலேந்தியுள்ள உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பதாகில் நீரை முகந்து எரிப்பீராக” என்றனர்.

அந்நிலையில் “நமி நந்தியே, அருகில் உள்ள குளத்தின் நீரை முகந்து விளக்கு ஏற்றுகு”  என்றதோர் அசரீரி ஒலித்தது. அதனைக் கேட்ட நமிநந்தியடிகள் திருவைந்தெழுத்தோதி கமலாலயத் திருக்குளத்து நீரை முகந்து விளக்கேற்றினார். விளக்கு சுடர்விட்டெரிந்தது. நாளும் இவ்வாற நீரால் திருவிளக்கு ஏற்றும் பணியினை மேற்கொண்டு செய்து வந்தார்.

அப்பொழுது தண்டியடிகள் நாயனாரால் சமணர்கள் கலக்கமடைந்து ஆரூரைவிட்டு அகன்றனர். சோழமன்னர் திருவாரூரில் பங்குனி உத்திரப் பெருவிழாவைச் சிறப்புற நிகழ்த்துதற்கு நமிநந்தியடிகள் உறுதுணையாக இருந்தார்.

திருவிழா நாட்களில் ஒரு நாள் திருவாரூர் இறைவர் அருகே உள்ள மணலி என்ற ஊருக்கு எழுந்தருள்வது வழக்கம். இறைவர் மீண்டு திருவாரூர் புக மாலைப் பொழுதாயிற்று. விழாவினைக் கண்டு மகிழ்ந்தத நமிநந்தியடிகள் இரவில் தனது ஊருரில் இருக்கும் வீட்டினுள்ளே செல்லாமல் புறங்கடையில் படுத்துறைங்கினார். மனைவியார் அவரை எழுப்பி “வீட்டினுள்ளே வந்து சிவ வழிபாடு செய்து பள்ளிகொள்ளலாம்” என அழைத்தார். அது கேட்ட நமிநந்தியடிகள் “இன்றைய தினம் திருவாரூரப் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்துச் சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியாரும் கலந்திருந்ததால் தீட்டுண்டாயிற்று. நீராடியே வீட்டிற்குள் வருதல் வேண்டும். குறித்ததற்குத் தண்ணீர் கொண்டு வா” என்று கூற, அவரும் உள்ளே விரைந்து சென்றார்.

இதற்கிடையில் நமிந்தியடிகளுக்குச் சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கப் பெருமான் அடிகள் கனவில் தோன்றி, “அன்பனே, திருவாரூரப் பிறந்தார் எல்லோரும் நம் சிவகணங்களே, அதை நீ காண்பாய்” என்று சொல்லி மறைந்தருளினார். விழித்தெழுந்த நமிநந்தியடிகள் அடியார்களிடையே சாதி வேறுபாடு நினைத்தது தவறு என்று உணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையை முடித்து விடிந்தபின் திருவாரூர்க்குச் சென்றார். திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். அடியார்களிடையே சாதி வேறுபாடு இருப்பதாக எண்ணிய தமது பிழையைப் பொறுத்தருளும்படி இறைவனை வேண்டினார். திருவாரூரையே தங்குமிடமாகக் கொண்டு திருத்தொண்டுகளைச் செய்து திருநாவுக்கரசரால் “தொண்டர்க்கு ஆணி” எனச் சிறப்பிக்கப்பெறும் பேறு பெற்று இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்