திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சோழ நாட்டிலே பிரமபரம் முதலிய பன்னிரெண்டு திருப்பெயர்களை உடைய சீகாழிப்பதியிலே நான்மறை உணர்ந்த அந்தணர் குலத்திலே கௌணிய கொத்திரத்திலே சிவபாதவிருதயர் என்பவர் செய்த தவப் பயனாக அவர் தம் மனைவியார் பகவதியார் திருவயிற்றில் ஆண்மகவு பிறந்தது. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றிய அக்குழந்தை மூன்றாம் வயதில் தம் தந்தையாருடன் சீர்காழிக் கோவிலுக்குச் சென்றது. தந்தையார் பிரமதீர்த்தக் கரையில் அக்குழந்தையை அமரச் செய்து தாம் குளத்தில் மூழ்கி நீராடினார். அவர் நீருள் மூட்கி மந்திரம் ஓதும் நிலையில் தந்தையைக் காணாத அக்குழந்தை திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து “அம்மே அப்பா” என்று கூவி அழுதது.

அந்நிலையில் தோணிபரத்து இறைவர் உமையம்மையுடன் விடை மேல் எழுந்தருளிப் பிரமதீர்த்தக் கரையினை அடைந்து உமாதேவியாரை நோக்கி, “அழுகின்ற பிள்ளைக்கு முலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டுக” எனப் பணித்து அருளினார். உமையம்மாயரும் சிவஞானமாகிய இனிய அமிழ்தத்தை பாலில் குழைத்துப் பிளையார் கையில் கொடுத்து அழகையைத் தீர்த்துப் பாலடி நிலை ஊட்டி அருளினார். இங்ஙனம் பிள்ளை பருவத்திலேயே அம்மையப்பரால் ஆட்கொள்ளப் பெற்றமையால் ஆளுடைய பிள்ளையார் எனவும் திருஞானசம்பந்தர் எனவும் போற்றப் பெற்றார்.

     நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறிய சிவபாத இருதயர் பால் வடியும் வாயினராய் நின்ற பிள்ளையை நோக்கி “யார் கொடுத்த பாலை உண்டாய்? எச்சில் கலக்க இதனை அளித்தாரைக் காட்டுக” என்று சிறிய கோல் ஒன்றை எடுத்து அடிப்பதற்கு ஓங்கினார். அப்பொழுது திருஞானசம்பந்தப் பிள்யைார் “தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகத்தினைப் பாடி “எம்மை இது செய்த பிரான் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனே” எனத் தம் தந்தையார்க்குச் சுட்டிக் காட்டினார். தந்தையார் பின்தொடரத் தோணிபுரத்து இறைவரைப் பாடிப்பரவிய திருஞானசம்பந்தர் அருகேயுள்ள திருக்கோலக்காத் திருக்கோயிலை அடைந்து தம் மெல்லிய கைகளால் தாளமிட்டுப் பாடினார். கோலக்கா இறைவர் அவருக்குப் பெற்றாளம் கொடுத்து அருளினார். தம் தாயார் பிறந்த திருநனிபள்ளிக்குத் தந்தையார் தோளில் அமர்ந்த சென்ற பிள்ளையார் பாலை நிலம் நெய்தல் நிலமாகும்படி காரைகள் கூகைமுல்லை என்ற பதிகம் பாடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் திருஞானசம்பந்தரை வணங்கி அவர் அருளிய திருப்பதிகங்களை யாழில் வாசிக்கவும் மிடற்றில் பாடவும் பேறு பெற்றனர்.

     ஆளுடைய பிள்ளையார் தில்லைப் பெருமானை வணங்கித் திருநெல்வாயில் அரத்துறையை அடைந்த பொழுது அரத்துறையீசர் அருளால் முத்துச்சிவிகை குடை சின்னம் பெற்றார். சீகாழியில் தமக்கு உபநயனச் சடங்கு நிகழ்ந்த போது “அந்தி்யுள் மந்திரம் அஞ்செழுத்துமே” எனப் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடியருளினால். சீகாழிப்பதியில் தம்மைக் காண வந்த திருநாவுக்கரசரை, “அப்பரே” என் அன்புடன் அழைத்து நண்பினால் உபசரித்தார். திருப்பாச்சிலாச்சிராமம் என்ற தலத்தை வணங்கச் சென்ற போது மழநாட்டரசன் கொல்லி மழவன் பெற்ற பெண்ணின் முயலக நோயைக் தீர்த்தருளினார். பனிப்பருவத்தில் கொங்கு நாட்டில் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த போது தம்முடன் வந்த திருக்கூட்டத்தாரைப் பனியென்னும் சுரநோய் பற்றாதபடி “அவ்வினைக் கிவ்வினை” என்னும் திருநீலகண்டத் திருப்பதிகத்தைப் பாடியருளினார். வேனிற் பருவத்தில் நண்பகலில் பட்டீச்சுரத்தை அடைந்த பொழுது சிவபெருமான் திருஞானசம்பந்தர்க்கு முத்துப்பந்தல் கொடுத்தருளினார். தந்தையார் வேள்வி செய்தற்கெனப் பொன்வேண்டிப் பாடிய போது திருவாவடுதுறையிறைவர் ஆயிரம் பொன்களைக் கொண்ட உலவாக்கிழியினைக் கொடுத்தருளினார். திருநீலகண்டப்பாணர் தாயார் பிறந்த தருமபுரத்தில் அவர் வேண்டியவண்ணம் யாழ்முரிப் பண் பாடியருளினார். திருச்சாத்தமங்கை, திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய தலங்களை வணங்கிய போது திருநீலநக்கர், சிறுதொண்டர், முருகனார் முதலிய அடியார்களுக்கு நண்பராய் அவர்களைத் திருப்பதிகத்திற்கு பாராட்டினால். திருமருகலில் விடந்தீண்டி இறந்த வணிகனைப் பதிகம் பாடி எழுப்பி அவனுடன் வந்த பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தருளினார். திருநாவுக்கரசருடன் திருவீழிமிர்லையில் தங்கியிருந்த போது திருவீழிமிர்லைப் பெருமான் பஞ்ச காலத்தில் நாள்தோறும் இருவர்க்கும் படிக்காசு அருள் உடன்வந்த அடியார்களுக்கு அமுது செய்வித்தருளினார். திருமறைக்காட்டில் “சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்” என்ற திருப்பதிகத்தினைப் பாடி மறைக்கதவினை மூடச் செய்தார்.

     பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வேண்டிக்கொண்டதற்கு இசைந்து பாண்டிநாடு சென்று திருவாலவாய் பெருமானைப் பாடிப் பரவினார். பாண்டியனது சார்பு பெற்ற சமணர்கள் சம்பந்தர் தங்கிய திருமடத்தில் நள்ளிரவில் தீயிட்டனர். அதனையுணர்ந்த சம்பந்தர் “அத்தீபையவே சென்று பாண்டியற் காகவே”     எனப் பாடினமையால் பாண்டியனுக்கு வெப்பு நோய் உண்டாயிற்று. சமணர்கள் மந்திரித்தும் பயனில்லை. மந்திரியார் குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் திருஞானசம்பந்தரைப் பணிந்து வேண்ட அவர் “மந்திரமாவது நீறு” என்னும் திருநீற்றுப்பதிகத்தைப் பாடி நீறு கொண்டு பாண்டியன் மேனியில் தடவியருளப் பாண்டியன் சுர நோய் நீங்கி உய்ந்தான். தோல்வியுற்ற சமணர்கள் நெருப்பிலும் நீரிலும் தத்தம் சமயவேடுகளை இட்டு வாது செய்வோம் எனச் சம்பந்தரை வாதுக்கு அழைத்தனர். பிள்ளையாரும் போகமார்த்த என்னும் திருப்பதிகம் எழுதிய ஏட்டினைத் தீயிலிட்டுப் பச்சைப்பதிகமாகக் காட்டினார். வாழக் அந்தணர் என்னும் திருப்பாசுரம் பாடி அப்பதிக ஏட்டினை வைகையாற்றில் இட்டு எதிர் ஏறிச் செய்தருளினார். இவ்வாதுகளில் தோல்வியுற்ற சமணர்கள் தாம் செய்து கொண்ட சபதப்படி கழுவிலேறி உயிர் துறந்தனர்.

     சமணர் சூழலில் அகப்பட்டிருந்த கூன்பாண்டியனை கூன் நிமிர நின்றசீர் நெடுமாறனாக்கிய திருஞானசம்பந்தர் ஆலவாய் இறைவரைப் பொற்றிப் பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து சோழ நாட்டுக்கு எழுந்தருளினார். திருக்கொள்ளம்பூதூர் இறைவனை வழிபடச் செல்லும் போது ஆற்றில் வெள்ளம் பெருகிறது. கொட்ட மேகமழும் என்ற என்ற பதிகம் பாடி நாவலமே கோல ஓடம் செலுத்தி அடியார்களுடன் இறைவனை வழிபட்டார். திருத்தெளிச்சேரியில் பிள்ளையாரது திருச்சின்ன ஒலி கேட்டுப் புத்தர்கள் தடுத்தனர். பிள்ளையார் பாடிய திருப்பதிகங்களை எழுதிக்கொள்ளும் அடியார் ஒருவர் புத்த சமண்கழுக்கையர் என ஞானசம்பந்தர் பாடலைப் பாடி புத்த நந்தி தலையில் இடி விழாச் செய்தார். புத்தர்கள் வாதில் தோற்றுச் சைவராயினர்.

     திருப்பூந்துரத்தியை அடைந்த திருஞானசம்பந்தர் நண்பிற்சிறந்த நாவுக்கரசருடன் அளவளாவி மகிழ்ந்தார். சீகாழிப்பதியை அடைந்து தோணியப்பரை வணங்கினார். தொண்டை நாட்டுத் தலங்களை வணங்க எண்ணிய சம்பந்தர் தில்லைக்கூத்தனைப் பணிந்து அண்ணாமலையை வழிபட்டுத் திருவோத்தூரை அடைந்தார். அங்கு அடியார் ஒருவர் வேண்டுகோட்கிணங்கிப் பூத்தோர்ந்தாயன என்ற பதிகத்தால் ஒத்தூரப் பெருமானைப் பரவிப் போற்றி ஆண்பனைகளை பெண்பனைகளாகக் காய்க்கும்படி செய்தருளினார். காரைக்காலம்மையார் தலையாலே நடந்த பதியாகிய திருவலாங்காட்டினை மிதிக்க அஞ்சி அதன் அருகேயுள்ள ஊரில் துயில் கொண்டார். அந்நிலையில் ஆலங்காட்டடிகள் கனவில் தோன்றி “நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ” என வினவியருளத் “துஞ்ச வருவாரும்” என்ற பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருக்காளத்தியை அடைந்து காளத்தி இறைவரையும் அருகே நின்ற கண்ணப்ப நாயனாரையும் வழிபட்டுத் திருவொற்றியூரை அடைந்தார்.

     மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் பிறந்த சிவநேசர் என்பவர், திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டில் சமணரை வாதில் வென்று திருநீறு பரப்பிய திறத்தை அறிந்தார் வாயிலாகக் கேட்டு, “காழிநாடுடைய சம்பந்தரக்கு அடியேன், யான் பெற்ற பூம்பாவையையும் ஈட்டிய பெருஞ் செல்வத்தையும் அவர்க்கே உடைமையாகக் கொடுத்தேன்” என் மொழிந்தார். தன் மகள் பூம்பாவை மலர் கொய்யும் நிலையில் அரவு தீண்டியிருந்தாள். அவளது உடம்மைபத் தகனஞ்செய்து எலும்பினை ஒரு குடத்தில் இட்டுக் கன்னிமாடத்தில் வைத்துப் பூசித்து வந்தார். திருவொற்றியூரில் திருஞானசம்பந்தர் எழுந்தருளிய நிலையில் அவரது திருமயிலைக்கு அழைத்து வந்து தமது குறையைத் தெரிவித்துக்கொண்டார். திருமயிலாப்பூரைத் அடைந்த திருஞானசம்பந்தர் இறைவரை வழிபட்டுப் புறத்தே போந்து சிவநேசரை நோக்கி அவர் மகளது என்பினைச் சேமித்த குடத்தினை கோயில் வாயிலிற் கொணரச் செய்தார். இறைவனது திருவருளை நினைந்து மக்கள் அடைதற்குரிய பெரும்பயன் சிவனடியார்களை அமுது செய்வித்தலும் இறைவனது திருவிழாப் பொலிவு கண்டு மகிழ்தலுமே என்பது உண்மையானால் பூம்பாவாய் நீ உலகர் முன் உயர் பெற்று வருவாயாக என “மட்டிட்ட புன்னையங்கானல்” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினார். அந்நிலையில் செந்தாமரை மலர் விரிய அதனுள் இருந்து தோன்றும் திருமகள் போன்று குடம் உடையக் குவித்த செங்கையினளாய் உயிர் பெற்று தோன்றினாள். சிவபெருமானை இறைஞ்சி திருஞானசம்பந்தரை வணங்கி நின்றாள். புண்ணியப் பதினாறாண்டு நிரம்பிய ஞானசம்பந்தரை நோக்கிப் பூம்பாவையைத் திருமணம் செய்து கொள்ளும்படி சிவநெசர் வேண்டிக் கொண்டார். “நீவிர் பெற்ற பெண் விடத்தினால் இறந்து பின்ப இறைவன் திருவருளால் யாம் பூம்பாவையை மீண்டும் பிறப்பித்தோம். ஆதலால் இவள் என் மகளே” என்று மறுத்தருளினார். பூம்பாவையும் சிவனருளை சிந்தித்திருந்து சிவத்தை மேவினாள்.

     திருஞானசம்பந்தர் மயிலைப் பெருமானை வழிபட்டுப் பல தலங்களைப் பணிந்து பாடிச் சீகாழிப்பதியை அடைந்தார். அவரை வணங்கம் விருப்புடன் முருக நாயனார், திருநீலநக்கர் சுற்றத்தாருடன் சீகாழிப்பதியை அடைந்தனர். சிவபாதவிருதயரும் சுற்றத்தாரும் திருஞானசம்பந்தரைத் திருமணம் செய்து கொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி உடன்படச் செய்தார்கள். திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி மகளாரை மகட்பேசி முடித்தார்கள். திருமண நாளில் திருஞானசம்பந்தர் திருமணக்கோலத்துடன் திருநல்லூருக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பி தம் மனைவியாருடன் திருஞானசம்பந்தர் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி “யான் பெற்ற மகளை ஆளுடைய பிள்ளையாருக்கு அளித்தேன்” என நீர் வார்த்துக் கொடுத்தார். திருநீலநக்க நாயனார் திருமணச் சடங்கினை வேத விதிப்படி நிகழ்த்தினார். திருஞானசம்பந்தர் வெண்பொரியினைத் தூவித் தீவலம் செய்யும் நிலையில் மணமகளது கையைப் பற்றிக்கொண்டு “விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த்தவரே” என மந்திர முறையில் வளர்த்த தீயினை வலம் வருபவர் “இவளோடும் சிவன் தாள்சேர்வேன்” என்னும் உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். உறவினர்களும் திருமணங் காணவந்த அடியார்களும் பிள்ளையாரைத் தொடர்ந்து சென்றனர். ஞானசம்பந்தர் “கல்லூர்ப் பெருமணம் வேண்டா” என்ற திருப்பதிக்கத்தினை பாடி “நாதனே உன்திருவடி நீழல் சேரும் பருவமு இதுவாகும்”  என் உளமுருகிப் போற்றினார். அப்பொழுது திருப்பெருமணக்கோயில் இறைவன் தூய சோதிப் பிழம்பாகத் தோன்றி “ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணங்களான இஞ்க வந்துள்ள எல்லோரும் இந்தச் சோதியுள்ளெ வந்து சேருங்கள்” என அச்சோதியிற் புகுதற்குரிய வாயிலையும் காட்டி அருள் புரிந்தார். உலகத்தார் உய்ய ஞான நன்னெறியினை அறிவுறுத்த எண்ணிய திருஞானசம்பந்தர் “காதலாகிக் கசிந்து கண்ணீரு் மல்க” என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடி இச்சோதியுள் யாவரும் வந்து புகுமின் என அழைத்துத் திருமணம் காணவந்த எல்லோரும் புகுந்த பின்னர்க் காதலியைக் கைப்பற்றிச் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து சிவபெருமானோடு ஒன்றி உடனானார்.

திருச்சிற்றம்பலம்