சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் திருமுறை

19 பதிகங்கள் – 301 பாடல்கள் – 14 கோவில்கள்


3. கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா


திருச்சிற்றம்பலம்


1. கோயில் – கணம் விரி

80.
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணல் கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தம் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்
மழைதவழ் வளரிளம் கமுகம்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 1

81.
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்
ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை என்றால்
அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 2

82.
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்
தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர
வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 3

83.
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தம் கோயில்
அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 4

84.
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 5

85.
நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும்
நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும்
விரிசடை அடிகள்தங் கோயில்
அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து)
அகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 6

86.
பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்
தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 7

87.
சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்
திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும்
புணர்ப்படை அடிகள்தம் கோயில்
ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 8

88.
பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையும் காட்டி
அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)
அருள்புரி பரமர்தம் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9

89.
உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று)
எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்
இருட் பிழம்(பு) அறஎறி கோயில்
வம்புலாம் கோயில் கோபுரம் கூடம்
வளர்நிலை மாடமா ளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 10

90.
இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)
எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்
பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச்
செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 11

2. திருக்களந்தை ஆதித்தேச்சரம்

91.
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 1

92.
சந்தன களபம் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய
திருநுதல் அவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)
எரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 2

93.
கரியரே இடந்தான் செய்யரே ஒருபால்
கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ்
முறைதெரிந்(து) ஓருடம் பினராம்
இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே மறைகளும் தேட
அரியரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 3

94.
பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு)
அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப்
பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தெந் குடிமுழு தாளும்
குழகரே ஒழுகுநீர்க் கங்கை
அழகரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 4

95.
பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம்(பு) அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல்ஆ டரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால்
துடியிடை இடமருங்(கு) ஒருத்தி
அவளுமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 5

96.
நீலமே கண்டம் பவளமே திருவாய்
நித்திலம் கிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் நிறையஆ னந்தம்
பொழியுமே திருமுகம் ஒருவர்
கோலமே அச்சோ அழகிதே என்று
குழைவரே கண்டவர் உண்டது
ஆலமே ஆகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே ! 6

97.
திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும்
திறத்தவர் புறத்திருந்(து) அலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே
புரியவம் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 7

98.
மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான
விளக்கரே எழுதுகோல் வளையாண்
மையரே வையம் பலிதிரிந்(து) உறையும்
மயானரே உளங்கலந் திருந்தும்
யய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 8

99.
குமுதமே திருவாய் குவளையே களமும்
குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம் கமலமே நயனம்
கனகமே திருவடி நிலைநீர்
அமலமே ஆகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9

100.
நீரணங்(கு) அகம்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் கரந்த
அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்
இருள்கிழிந்(து) எழுந்தசிந் தையரே. 10

3. திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்

101.
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்
சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்
திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டுர்
வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே. 1

102.
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
கழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமும் காட்டிக்
கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்
கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனங்கலந் தானே. 2

103.
திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேல்
புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப்
போய்வருந் தும்பிகாள் ! இங்கே
கிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவளைக் கண்(டு)என்
மனத்தையும் கொண்டுபோ துமினே. 3

104.
தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்
செவியவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்புவாய் கண்கள்
விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே !என்னும்என் மனனே. 4

105
தோழி !யாம்செய்த தொழில்என்? எம் பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும்
கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வாழிய மணியம் பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யோமே. 5

106.
என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய்
இரவுபோம் பகல்வரு மாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்
அலமரு மாறுகண்(டு) அயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில்
கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மஞ்சணி மணியம் பலவஓ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே. 6

107.
தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்
சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம்
கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே. 7

108.
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகம் திருவடி திருநீறு
இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி
இளம்பிறை குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனத்துள்வைத் தனனே. 8

109.
யாதுநீ நினைவ(து)? எவரையாம் உடையது?
எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தன்என் மனம்புகுந் தனனே. 9

110.
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும்வெண் ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்;
செய்வதென்? தெளிபுனல் அலங்கல்
கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்
கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே அறியும்என் மனமே. 10

111.
கித்திநின் றாடும் அரிவையர் தெருவில்
கெழுகவும் பலைசெய்க்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில்
முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல்
முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே. 11

4. திருமுகத் தலை

112.
புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே
பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்
பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமைநீங் குதற்கே. 1

113.
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து
புணர்பொருள் உணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
வளரொளி மணிநெடுங் குன்றே
முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
விழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த
வெள்ளமாய் உள்ளமா யினையே. 2

114.
கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்
கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்
முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்
பன்னகா பரணா பவளவாய் மணியே !
பாவியேன் ஆவியுள் புகுந்த(து)
என்னகா ரணம்? நீ ஏழைநாய் அடியேற்கு
எளிமையோ பெருமையா வதுவே. 3

115.
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்
கிடையனா ருடையஎன் நெஞ்சில்
பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்
பரமனே ! பன்னகா பரணா !
மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை விளைந்து
நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்
நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே ! 4

116.
அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)
ஐவரோ(டு) என்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)
என்னைஆள் ஆண்டநாய கனே !
முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 5

117.
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்
மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே
முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !
முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்
விழுமிய விமானமா யினதே. 6

118.
விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்
வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களாம் செய்த
பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே. 7

119.
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)
என்பெலாம் உருகநீ எளிவந்(து)
உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே !
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே
கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்
கனியுமாய் இனிமையாய் இனையே. 8

120.
அம்பரா அனலா; அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
முகத்த¨l அகத்தமர்ந்(து) எனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயுமா யினையே. 9

121.
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தவை அகத்தமர்ந்(து) இனிய
பாலுமாய், அமுதாப் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி இணைமேல்
ஆலயம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே.

5. திரைலோக்கிய சுந்தரம்

122.
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 1

123.
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 2

124.
அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! 3

125.
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்?
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 4

126
நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 5

127.
முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 6

128.
தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 7

129.
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 8

130.
ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 9

131.
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காஎம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 10

132.
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 11

6. கங்கைகொண்ட சோளேச்சரம்

133.
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 1

134.
உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா !
ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்
மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேல்
பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 2

135.
அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே
அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்
தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்
பவளவா யவர்பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 3

136.
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்
அழகிய விழியும்வெண்ணீறும்
சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்
தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகமலர்ந்து இருகணீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே ! 4

137.
கருதிவா னவனாம் திருநெடு மாலாம்
சுந்தர விசும்பின்இந் திரனாம்
பருதிவா னவனாம் படர்சடை முக்கண்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த
ஏறுசே வகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 5

138.
அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்
அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்
உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்
உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்
குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே ! 6

139.
மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த
முழுமணித் திரள்அமு(து) ஆங்கே
தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய
தன்மையில் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே
நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 7

140.
தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)
அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)
அமலரு(கு) அளிக்கும்நின் பெருமை
பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 8

141.
பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்
புகுந்ததோர் யோகினில் பொலிந்து
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்
கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 9

142.
அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை மருங்கில்
கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்
கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்
கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே. 10

143.
மங்கையோ டிருந்த யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேல்
கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே. 11

7. திருப்பூவணம்

144.
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்¢ன்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. 1

145.
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. 2

146.
கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில்
கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள்
இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. 3

147.
கண்ணியல் மணியின் குழல்புக்(கு) அங்கே
கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. 4

148.
கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்
அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க
நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்
புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்
பூவணங் கோயில் கொண் டாயே. 5

149.
செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன்
சேவடி பார்த்திருந்(து) அலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்
என்னுடை அடிமைதான் யாதே?
அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
அரிவையர் அவிழ்குழல் கரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. 6

150.
சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்
சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. 7

151.
பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை வனிதைபா களைவெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகளை அழகெலாம் நிறைந்த
தீவணன் தன்னைச் செழுமறை தெரியும்
திகழ்தரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும் வல் லார்கள்
பரமனது உருவமா குவரே. 8

8. திருச்சாட்டியக்குடி

152.
பெரியவா கருணை இளநிலா எறிக்கும்
பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து
சரியுமா கழியங் குழைமிளிர்ந்து இருபால்
தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்யவாய் முறுவல்
காட்டுமா சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண்(டு) அலர்ந்தவா முகம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 1

153.
பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம்
பட்டவர்த் தனம்எரு(து) அன்பர்
வார்ந்தகண் அருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெரும் தேவி
சாந்தமும் திருநீ(று) அருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயம் கோயில்மாளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே. 2

154.
தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்
தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை
கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே. 3

155.
பதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்
பரிவொடு பாடுகாந் தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்
தமருகம் சாட்டியக் குடியார்
இதயமாம் கமலம் கமலவர்த் தனைஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 4

156.
திருமகன் முருகன் தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான்
மலையுடை அரையர்தம் பாவை
தருமலி வளனாம் சிவபுரன் தோழன்
தனபதி சாட்டியக் குடியார்
இருமுகம் கழல்முன்று ஏழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே. 5

157.
அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
அம்பரா ! அம்பரத்(து) அளிக்கும்
கனகமே ! வெள்ளிக் குன்றமே என்றன்
களைகணே, களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே சாட்டியக் குடியார்க்(கு)
இனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ்
இருக்கையில் இருந்தவா(று) இயல்பே. 6

158.
செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்து
அன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
அத்தனே பித்தனே னுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே !
சங்கரா சாட்டியக் குடியார்க்(கு)
இன்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா(று) இயம்பே. 7

159.
செங்கணா போற்றி ! திசைமுகா போற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும்
எங்கள்நா யகனே போற்றி ! ஏழ் இருக்கை
இறைவனே ! போற்றியே போற்றி ! 8

160.
சித்தனே ! அருளாய் ! செங்கணா ! அருளாய் !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே ! அருளாய் ! அமரனே ! அருளாய் !
அமரர்கள் அதிபனே ! அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏழ் இருக்கை
முத்தனே ! அருளாய் ! முதல்வனே ! அருளாய் !
முன்னவா துயர்கெடுத்(து) எனக்கே. 9

161
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேல்
காட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்
கழறுசொல் மாலைஈர் ஐந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே
வளரொளி விளங்குவா னுலகே. 10

9. தஞ்சை இராசராசேச்சரம்

162.
உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !
அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்(து) இவர்க்கே. 1

163,
நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா
நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதிகில்வாழ் முதலை
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 2

164.
சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 3

165.
வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்
வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளீர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 4

166.
எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை
அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 5

167.
அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 6

168.
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும்
நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே
கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 7

169.
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சுசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 8

170.
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதிர் அனையவா ழியரோ !
பொங்கழில் திருநீறு அழிபொசி வனப்பில்
புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 9

171.
தனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம்
தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆர் அமிர்தர்
புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே. 10

172.
சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
பொன்நெடுங் குன்றுடை யோரே. 11

10. திருவிடைமருதூர்

173.
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மைய செங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்
மருவிடம் திருவிடை மருதே. 1

174.
இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே. 2

175.
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன
பல்லவம் வல்லியென்(று) இங்ஙன்
வினைபடு கனகம் போலயா வையுமாய்
வீங்குல(கு) ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமகள் உடனாய்த்
தூக்கிருள் நடுநல்யா மத்தென்
மனனிடை அணுகி நுணிகியுள் கலந்தோன்
மருவிடம் திருவிடைமருதே. 3

176.
அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்கு
அடியனேன் உள்கலந்து அடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
படர்சடை விடம்மிடற்(று) அடிகள்
துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை
கடர்உமிழ் தரஅதன் அருகே
மணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்(து) இமைப்ப
மருவிடம் திருவிடைமருதே. 4

177.
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல்
படிவழி சென்று சென்றேறிச்
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி
தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன்
எண்ணில்பல் லூழிகள் உடனாய்
வந்தணு காது நுணிகியுள் கலந்தோன்
மருவிடம் திருவிடைமருதே. 5

178.
எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு)
ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும்
தூங்கிருள் நடுநல்யா மத்தே
அருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்ப
அந்திபோன்(று) ஒளிர்திரு மேனி
வரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான்
மருவிடம் திருவிடைமருதே. 6

179.
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந்(து) உருகி
அழலையாம் புருவம் புனலொடும் கிடந்தாங்கு
ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம்
தூங்கிருள் நடுநல்யா மத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
மருவிடம் திருவிடை மருதே. 7

180.
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார்
மாதவர் காதல்வைத் தென்னை
வெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல்
விழுமியோன் முன்புபின்(பு) என்கோ
நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த
நூறுநூ றாயிர கோடி
மையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன்
மருவிடம் திருவிடை மருதே. 8

181.
கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக்
கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு
நலம் கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த
நம்பனே வம்பனே னுடைய
புலங்கலந் தவனே ! என்று நின்(று) உருகிப்
புலம்புவார் அலம்புகார் அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான்
மருவிடம் திருவிடைமருதே. 9

182.
ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன்
மருவிடம் திருவிடைமருதே. 10

திருச்சிற்றம்பலம்