மூர்க்க நாயனார்

தொண்டை நாட்டில் திருவேற்காடு என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் மூர்க்கநாயானர். இவர் சூதாடும் தொழிலில் தேர்ச்சி பெற்றவர். சூதாடி வென்றுகொண்டே பொருளையெல்லாம் சிவனடியார்களுக்கு அமுதூட்டுவதில் செலவு செய்து வந்தார். தம்மூரில் சூதாட வருவோர் கிடைக்காமையால் சோழநாட்டுத் திருக்குடந்தைக்கு வந்து தங்கிச் சூதாடிப் பெற்ற பொருளைக்கொண்டு நாள்தோறும் சிவனடியார்களுக்கு அமுது படைத்து வருவாராயினர். தம்முடன் சூதாட வருவோர் ஆட்டத்தில் முறை தவறி நடப்பாராயின் அவர்களை வாளால் குத்திக் கொல்லும் மூர்க்கத் தன்மையினராக இவர் வாழ்ந்தமையால் மூர்க்கர் என வழங்கப் பெற்றார். எத்தொழிலைச் செய்தேனும் அடியார்களது பசியை அகற்றுதலைக் குறிக்கோளாகக் கொண்ட மூர்க்க நாயனார் சிவனடியார்களுக்கு அன்னம் அளித்து அரனடியை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்