சாக்கிய நாயனார்

சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்த இவர். எவ்வுயிர்க்கும் அருளுடையராயப் பிறவா நிலை பெற விரும்பிக் காஞ்சி நகரத்தை அடைந்து புத்த சமயத்தை மேற்கொண்டார். அது பற்றிச் சாக்கியர் எனப் பெயர் பெற்றார். புத்த சமயத்தை மேற்கொண்ட இவர் பல சமய நூல்களையும் பயின்று சிவநெறியே பொருளாவது எனத் தெளிந்தார். உலகில் செய்யப்படும் வினை அவ்வினையைச் செய்யும் ஆன்மா, வினைப் பயனை ஆன்மா நுகரும்படி ஊட்டுவிக்கம் இறைவன் என்னும் மெய்ப்பொருள் நான்கையும் வற்புறுத்துவது சைவசமயம் ஒன்றேயாகும். எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப் பொருளாகும் என்று ஆராய்ந்து துணிந்த சாக்கியர் தாம் கொண்ட புத்த வேடத்துடனேயே சிவபெருமானை மறாவது போற்றுவாராயினர். சிவலிங்கப் பெருமானைக் கண்டு கும்பிட்ட பின்னரே உண்பது என உறுதிபூண்டார் சிவலிங்கத்தினைக் கண்டார். அம்மகிழ்ச்சியின் பயனாக இன்னது செய்வதென்றறியாது அருகிற்கிடந்த செங்கற்கல்வியை எடுத்து அதன் மேல் எறிந்தார். அதுவே சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. ஒரு நாள் உணவுண்ண வந்து சாக்கியர் “இன்று எம் பெருமானைக் கல்லால் எறிதற்கு மறந்துவிட்டேனே” என்று எழுந்து விரைந்தோடிச் சிவலிங்கத்தின் மேல் சிறு கல்லினை எறிந்தார். இறைவனை மறவாத பேரன்பினை உடைய அவருக்குச் சிவபெருமான் உமையம்மையாருடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்துச் சிவலோகத்தில் தம் பக்கத்தே இருக்கும் பெருஞ்சிறப்பினை வழங்கியருளினார்.

திருச்சிற்றம்பலம்