கணநாத நாயானர்

இவர் ஆளுடைய பிள்ளையார் அவதரித்து அருளிய சீகாழிப்பதியில் தோன்றியவர். மனையற வாழ்க்கையினை மேற்கொண்டு திருநந்தவனம் அமைத்தல் மலர் கொய்து மாலை தொடுத்தல் முதலிய திருப்பணிகளைத் திருத்தோணியப்பருக்குத் தாமே செய்தும் அத்தொண்டுகளில் அடியார்களைப் பழக்கியும் அடியார்களுக்கு வேண்டிய வசதிகளை அன்புடன் செய்தும் வந்தார். மதுரையில் சமணர்களை வாதில் வென்று சைவம் வளர்த்த திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவடிகளை முப்பொழுதும் வழிபடும் நியமமுடையராய் வாழ்ந்தார். பிள்ளையார் அருளிய திருமுறைகளை எழுதுதலும் வாசித்தலும் ஆகிய செந்தமிழ்ப் பணியைத் திருத்த முறச் செய்து வந்தார். திருக்கயிலாயத்தை அடைந்து சிவ கணங்களுக்கு நாதரானார்.

திருச்சிற்றம்பலம்