சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் திருமுறை

19 பதிகங்கள் – 301 பாடல்கள் – 14 கோவில்கள்


4. பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா


திருச்சிற்றம்பலம்


1. திருவாருர்

183.
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆருர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே. 1

184.
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ(று) அமுதம்ஒத் தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆருர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே. 2

2. கோயில் – முத்து வயிரமணி

185.
முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப்
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 1

186.
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. 2

187.
அல்லியம் பூம்பழனத்(து) ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. 3

188.
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட் கொண்டருளி
அம்பந்து கண்ணாளும் தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே. 4

189.
களையா உடலோடு சேரமான் ஆருரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே. 5

190.
அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்க்
சிவலோகம் ஆவதுவும் தில்லைச் சிற் றம்பலமே. 6

191.
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச் சிற் றம்பலமே சேர்ந்தனையே. 7

192.
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நயிற்றுமலர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. 8

193.
உருவத்(து) எரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 9

194.
சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதியசத்தை ஆங்கறித்து பூந்துருத்திக்
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே. 10

திருச்சிற்றம்பலம்