புகழ்ச்சோழ நாயனார்

சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூரில் சோழர் குடியிலே தோன்றியவர் புகழ்ச்சோழர். இவர் உலகமெலாம் செங்கொலின்வழி நிற்பச் சிவநெறி தழைப்ப அரசு புரிந்தார். கொங்க நாட்டரசர்களும் குடநாட்டு வேந்தர்களும் தரும் திறைப் பொருளை வாங்குதற் பொருட்டுச் சேனையுடன் கருவூரில் தங்கி ஆனிலையண்ணலாரை இறைஞ்சி அரியாசனத்தில் வீற்றிருந்தார். ஒரு நாள் சிவகாமியாண்டார் கையிலுள்ள பூக்குடலையைப் பட்டத்து யானை சிதறிய குற்றத்தி்ற்காக அந்த யானையையும், பாகரையும் கொன்று நின்ற எறிபத்த நாயனாரை அடைந்து தம்முடைய உடைவாளைத் தந்து “இக்குற்றத்திற்காக என்னையும் கொல்லுதல் வேண்டும்” என்றார். எறிபத்தர் அவ்வாளினால் தன்னைக் குத்திக்கொள்ளும் நிலையில் அவர் கையைப் பற்றிக்கொள்ள இறைவனருளால் யானையும் பாகரும் உயர் பெற்றழும்படி அடியார் பத்தியிற்சிறந்து விளங்கினார். புகழ்ச்சோழர் அனுப்பிய சேனைத் தலைவர்கள், திறை கொடாத அதிகனது மலையரணைப் பொடியாக்கி அவன் ஓடி ஒளியும்படி அவனுடைய படைவீரர்களைக் கொன்று அவர்கள் தலைகளையும் நிதிக்குவியல்களையும் சேனைகளையும் கருவூர்க்குக் கொண்டு வந்தனர். அவர்கள் வெட்டிக் கொணர்ந்த படை வீரர்களைிலே சிவனடியார்க்குரிய சடைத்தலை ஒன்றினைத் கண்ட புகழ்ச்சோழர் “சீர்தாங்கும் இவர்வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும் பார்தாங்க இருந்தேனோ பழி்தாங்குவேன்” என்று நெஞ்சம் நெகிழ்ந்து இரங்கினார். செந்தீ வளர்க்கும்படி செய்து திருநீற்றினை அணிந்து சடைத்தலையினைப் பொற் காலத்தில் ஏந்தித் தமது முடிமேல் தாங்கிக் கொண்டு தீயினை வலம் வந்து திருவைந்தெழுத்தோதி அத்தீயினுள்ளே புகுந்து சிவபெருமான் திருவடி நீழற்கீழ் அமர்ந்து இன்புறும் பெருவாழ்வு பெற்றார்.

திருச்சிற்றம்பலம்