46 சத்தி நாயனார்

சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார். சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால்தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்