சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.003 திருநெல்வாயில் அரத்துறை


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அரத்துறைநாதர், தேவியார் – ஆனந்தநாயகியம்மை.


022
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.01
023
கறிமா மிளகும் மிகுவன் மரமும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலா ரவர்காண நடஞ்செய்
நெல்வா யில்அரத் துறைநின் மலனே
வறிதே நிலையாத இம்மண் ணுலகில்
நரனா கவகுத் தனைநா னிலையேன்
பொறிவா யிலிவ்வைந் தினையும் மவியப்
பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்லே. 7.3.02
024
புற்றா டரவம் மரையார்த் துகந்தாய்
புனிதா பொருவெள் விடையூர் தியினாய்
எற்றே ஒருகண் ணிலன்நின்னை யல்லால்
நெல்வா யில்அரத் துறைநின் மலனே
மற்றேல் ஒருபற் றிலனெம் பெருமான்
வண்டார் குழலாள் மங்கைபங் கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.03
025
கோடுயர் கோங்க லர்வேங் கையலர்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வா யிலரத்
துறைநின் மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனற்க ரையாம் இளமை
உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி
வாடி இருந்து வருந்தல் செய்யா
தடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.04
026
உலவு முலகிற் றலைகற் பொழிய
உயர்வே யோடிழி நிவவின் கரைமேல்
நிலவு மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
புலனைந் தும்மயங் கியகங் குழையப்
பொருவே லோர்நமன் றமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.05
027
ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நீலம் மலர்ப்பொய் கையிலன் னம்மலி
நெல்வா யிலரத் துறையாய் ஒருநெல்
வாலூன் றவருந் தும்முடம் பிதனை
மகிழா தழகா வலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.06
028
சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.07
029
திண்டேர் நெடுவீ தியிலங் கையர்கோன்
றிரள்தோ ளிருபஃ தும்நெரித் தருளி
நெண்டா டுநெடு வயல்சூழ் புறவின்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
பண்டே மிகநான் செய்தபாக் கியத்தாற்
பரஞ்சோதி நின்னா மம்பயிலப் பெற்றேன்
அண்டா வமரர்க் கமரர் பெருமான்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.08
030
மாணா வுருவா கியோர்மண் ணளந்தான்
மலர்மே லவன்நேடி யுங்காண் பரியாய்
நீணீள் முடிவா னவர்வந் திறைஞ்சும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
வாணார் நுதலார் வலைப்பட் டடியேன்
பலவின் கனியீந் ததுபோல் வதன்முன்
ஆணோடு பெண்ணா முருவாகி நின்றாய்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே. 7.3.09
031
நீரூ ரும்நெடு வயல்சூழ் புறவின்
நெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலி
தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
ஆரூ ரனுரைத் தனநற் றமிழின்
மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையானை மன்ன
ரவராகி யோர்விண் முழுதாள் பவரே. 7.3.10

 

திருச்சிற்றம்பலம்