சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.004 திருஅஞ்சைக்களம்


இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் – உமையம்மை.


பண் – இந்தளம்

032

தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.01
033

பிடித்தாட்டி யோர்நாகத் தைப்பூண்ட தென்னே
பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே
பொடித்தான்கொண் டுமெய்ம்முற் றும்பூசிற் றென்னே
புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே
மடித்தோட் டந்துவன் றிரையெற் றியிட
வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய
அடித்தார் கடலங் கரைமேன் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.02
034

சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே
சிறியார் பெரியார் மனத்தேற லுற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்
முனிகள் முனியே அமரர்க் கமரா
சந்தித் தடமால் வரைபோற் றிரைகள்
தணியா திடறுங் கடலங் கரைமேல்
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.03
035

இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்
இலையே ஒத்தியால் இணையே ஒத்தியாற்
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்
மழைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.04

036

வீடின் பயனென் பிறப்பின் பயனென்
விடையே றுவதென் மதயா னைநிற்க
கூடும் மலைமங் கைஒருத் தியுடன்
சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
பாடும் புலவர்க் கருளும் பொருளென்
நிதியம் பலசெய் தகலச் செலவில்
ஆடுங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.05

037

இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே
இறந்தார் தலையிற் பலிகோட லென்னே
பரவித் தொழுவார் பெறுபண்ட மென்னே
பரமா பரமேட் டிபணித் தருளாய்
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தங்
கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டரவக் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.06

038

ஆக்கு மழிவு மமைவும்நீ யென்பன்நான்
சொல்லுவார் சொற்பொரு ளவைநீ யென்பன்நான்
நாக்குஞ் செவியுங் கண்ணும்நீ யென்பன்நான்
நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பலவெத் தனையுங்
கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.07

039

வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்
விளங்குங் குழைக்கா துடைவே தியனே
இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்
தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்
கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்
கடுகப் பிரமன் றலையைந் திலுமொன்
றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.08

040

பிடிக்குக் களிறே ஒத்தியா லெம்பிரான்
பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்
நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்
சிலைதொட் டவனே உனைநான் மறவேன்
வடிக்கின் றனபோற் சிலவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே. 7.4.09

041

எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவுங் குழலு மியம்பும்
வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்
டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே. 7.4.10

திருச்சிற்றம்பலம்