சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.012 திருநாட்டுத்தொகை


திருச்சிற்றம்பலம்


பண் – இந்தளம்

112
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்
தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே. 7.12.1

113
அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே. 7.12.2

114
மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர்
நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர்
கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே. 7.12.3

115
தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே. 7.12.4

116
குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்
மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே. 7.12.5

117
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே. 7.12.6

118
ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய
கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே. 7.12.7

119
நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே. 7.12.8

120
தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே. 7.12.9

121
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே. 7.12.10

122
பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை
ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல்
பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே. 7.12.11

திருச்சிற்றம்பலம்