சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.019 திருநின்றியூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மகாலட்சுமியீசுவரர், தேவியார் – உலகநாயகியம்மை


பண் – நட்டராகம்

188
அற்றவ னாரடி யார்தமக் காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபர ரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே. 7.19.1

189
வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர் போற்றுமெம் புண்ணியத்தார்
நேசத்தி னாலென்னை யாளுங்கொண் டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே. 7.19.2

190
அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி யுந்திரு நின்றியூரே. 7.19.3

191
ஆறுகந் தாரங்கம் நான்மறை யாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந் தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந் தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிட மாந்திரு நின்றியூரே. 7.19.4

192
வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி னாரதி கைப்பதியே
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும் இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே. 7.19.5

193
ஆர்த்தவர் ஆடர வம்மரை மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல் வெம்புலால் கையகலப்
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத் தான்சிர மஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட மாந்திரு நின்றியூரே. 7.19.6

194
தலையிடை யார்பலி சென்றகந் தோறுந் திரிந்தசெல்வர்
மலையுடை யாளொரு பாகம்வைத் தார்கல் துதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ் சுழல அருநடஞ்செய்
நிலையுடை யாருறை யும்மிட மாந்திரு நின்றியூரே. 7.19.7

195
எட்டுகந் தார்திசை ஏழுகந் தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசையிச் சிக்கும் இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது நந்திரு நின்றியூரே. 7.19.8

196
காலமும் ஞாயிறு மாகிநின் றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் பாரடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட மாந்திரு நின்றியூரே. 7.19.9

197
வாயார் மனத்தால் நினைக்கு மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி யாடிய மேனியர் வானிலென்றும்
மேயார் விடையுகந் தேறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர் ஊர்திரு நின்றியூரே. 7.19.10

198
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந் தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர மன்னடி கூடுவரே. 7.19.11

திருச்சிற்றம்பலம்