சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.029 திருக்குருகாவூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வெள்ளிடையப்பர், தேவியார் – காவியங்கண்ணியம்மை


பண் – நட்டராகம்

289
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1

290
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2

291
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3

292
வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4

293
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5

294 பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6

295
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7

296
மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8

297
படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9

298
வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10

திருச்சிற்றம்பலம்