சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.048 திருப்பாண்டிக்கொடுமுடி


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கொடுமுடிநாதர், தேவியார் – பண்மொழியாளம்மை


பண் – பழம்பஞ்சுரம்

488
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.1

489
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.2

490
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.3

491
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.4

492
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.5

493
ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.6

494
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.7

495
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.8

496
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7.48.9

497
கோணி யபிறை சூடியைக் கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே. 7.48.10

திருச்சிற்றம்பலம்