சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.049 திருமுருகன்பூண்டி


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆவுடைநாயகர் தேவியார் – ஆவுடைநாயகியம்மை


பண் – பழம்பஞ்சுரம்

498
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.1

499
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.2

500
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார்
*உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.3

501
பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங் கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.4

502
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.5

503
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.6

504
வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும் முத்தி நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.7

505
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.8

506
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 7.49.9

507
1முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர் பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் ஒன்றுந் தாமி லரே. 7.49.10

திருச்சிற்றம்பலம்