சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.050 திருப்புனவாயில்


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பழம்பதிநாயகர் தேவியார் – பரங்கருணைநாயகியம்மை


பண் – பழம்பஞ்சுரம்

508
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே. 7.50.1

509
கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே. 7.50.2

510
தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும்
நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப்
புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே. 7.50.3

511
வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும்
பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே. 7.50.4

512
நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும்
நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம்
வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே. 7.50.5

513
மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே. 7.50.6

514
ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே. 7.50.7

515
கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே. 7.50.8

516
எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே. 7.50.9

517
பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே. 7.50.10

திருச்சிற்றம்பலம்