சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.78 திருக்கேதாரம்


இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கேதாரேசுவரர்
தேவியார் – கேதாரேசுவரியம்மை.


பண் – நட்டபாடை

792
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே. 7.78.1

793
பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே
அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே. 7.78.2

794
கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி
நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்
கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே. 7.78.3

795
உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள்
வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர்
சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின்
கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே. 7.78.4

796
வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே
நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி
ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே
கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே. 7.78.5

797
தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே
குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி
தெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக்
கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே. 7.78.6

798
பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக்
கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய
மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக்
கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே. 7.78.7

799
முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத்
துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி
வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக்
கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே. 7.78.8

800
பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர்
மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற்
கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக்
கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே. 7.78.9

801
நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன்
தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே. 7.78.10

திருச்சிற்றம்பலம்