சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.96 திருவாரூர்ப் பரவையுண்மண்டளி


திருச்சிற்றம்பலம்


பண் – பஞ்சமம்

975
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.1

976
பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர் வானத் திளஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.2

977
நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க்
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.3

978
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.4

979
பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.5

980
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.6

981
விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்
கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.7

982
காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்
கூற்றானே கோல்வளை யாளையோர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.8

983
செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே. 7.96.9

984
கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே. 7.96.10

திருச்சிற்றம்பலம்