சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.97 திருநனிபள்ளி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நற்றுணையப்பர், தேவியார் – பர்வதராசபுத்திரி.


பண் – பஞ்சமம்

985
ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய
சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.1

986
உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய
அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.2

987
வானுடை யான்பெரி யான்மனத் தாலும்நினைப் பரியான்
ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு வாகியோர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுட லம்ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.3

988
ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர்
பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும் பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிட மாமலை ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.4

989
பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்துக்
கண்ணற் கருள்புரிந் தான்கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவ ரையுருண் டோ ட உதைத்துகந்து
நண்ணற் கரிய பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.5

990
மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழி லான்விருப் பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.6

991
அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந் தணர்எரி மூன்றவை ஓம்புமிடம்
பங்கய மாமுகத் தாளுமை பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே. 7.97.7

992
திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளை வான்அரு மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிர லால்அடர்த் தான்வல் லரக்கனையும்
நங்கட் கருளும் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.8

993
ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து
வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று
ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.97.9

994
காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி
கோலம தாயவ னைக்குளிர் நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப் பார்மண் மறந்துவா னோருலகிற்
சாலநல் லின்பமெய் தித்தவ லோகத் திருப்பவரே. 7.97.10

திருச்சிற்றம்பலம்