சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் திருமுறை

19 பதிகங்கள் – 301 பாடல்கள் – 14 கோவில்கள்


8. புருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா


திருச்சிற்றம்பலம்


1. கோயில் – வாரணி

257.
வாரணி நறுமலர் வண்டு கிண்டு
பஞ்சமம் செண்பக மாலைமாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்து வந்திலைநம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு
தில்லையம்பலத்(து) எங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள்புரிந்(து) அஞ்சல் என்பார்
ஆவியின் பரம்என்றன் ஆதரவே. 1

258.
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினை யேனைவிட்டு அம்மஅம்ம
பாவிவன் மனமிது பையவே போய்ப்
பனிமதிச் சடையான் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமும் தஞ்சமி லாமையாலே
ஆவியின் வருத்தம் இதாரறிவார்
அம்பலத்(து) அருள்நடம் ஆடுவானே. 2

259.
அம்பலத் தருள்நடம் ஆடவேயும்
யாதுகொல் விளைவதென்(று) அஞ்சிநெஞ்சம்
உம்பர்கள்வன்பழி யாளர்முன்னே
ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைய பூதஞ்சூழ
வானவர் கணங்களை மாற்றியாங்கே
என்பெரும் பயலமை தீரும்வண்ணம்
எழுந்தரு ளாய்எங்கள் வீதியூடே ! 3

260.
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
ஏதமில் முனிவரோ(டு) எழுந்தஞானக்
கொழுந்தது வாகிய கூத்தனேநின்
குழையணி காதினில் மாத்திரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் முன்றும்
செங்கனி வாயும்என் சிந்தைவெளவ
அழுந்தும்என் ஆருயிர்க்(கு) என்செய் கேனோ?
அரும்புனல் அலமரும் சடையினானே ! 4

261.
அரும்புனல் அலமரும் சடையி னானை
அமரர்கள் அடிபணிந்து அரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும் என் பேதை நெஞ்சில்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகை யார்முன்(பு)என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே. 5

262.
தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லைய தாகிய எழில்கொள் சோதி
என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்
பல்லையார் பகந்தலை யோ(டு) இடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடம் ஆடில் எங்கள்
ஆருயிர் காவலிங்(கு) அரிது தானே. 6

263.
ஆருயிர் காவலிங்(கு) அருமை யாலே
அந்தணர் மதலைநின் அடிபணியக்
கூர்நுனை வேற்படைக்கூற்றம் சாயக்
குரைகழல் பணிகொள மலைந்த தென்றால்
ஆரனி அமரர்கள் குறைவி லாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா !
சேயிழை யார்க்கினி வாழ்வரிதே. 7

264.
சேயிழை யார்க்கினி வாழ்வரிது
சிற்றம் பலத்தெங்கள் செல்வ னேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
தனிமையை நினைகிலை சங்க ராவுன்
பாயிரம் புலியதள் இன்னுடையும்
பையமேல் எடுத்தபொற் பாத மும்கண்(டு)
ஏயிவல் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈச னேயோ. 8

265.
எங்களை ஆளுடை ஈசனையோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுகம் நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரைகண்ணி மார்கள் முன்னே
திருச்சிற்றம் பலமுட னேபுகுந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே. 9

266.
அருள்பெறின் அகலிடத்(து) இருக்கலா மென்று
அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
ஏத்துகின் றார் இன்னம் எங்கள்கூத்தை
மருள்படு மழலைமென் மொழிவுமையாள்
கணவனை வல்வினை யாட்டி யேனான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத் தார்இங் காரே? 10

267.
ஆசையை அளவறுத் தார்இங் காரே?
அம்பலத்(து) அருநடம் ஆடு வானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப் பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வன்புரு டோத்தமன் கண்டு ரைத்த
வாசக மலர்கள் கொண் டேத்த வல்லார்
மலைமகள் கணவனை அணைவர் தாமே.

2. கோயில் – வானவர்கள்

268.
வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ?
தேனல்வரி வண்டறையும் தில்லைசிற்றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே. 1

269.
ஆடிவரும் கார்அரவும் ஐம்மதியம் பைங்கொன்றை
சூடிவருமா கண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடியிமை யோர்பரவும் தில்லைசிற்றம் பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே. 2

270.
ஒட்டா வகைஅவுணர் முப்பரங்கள் ஓர்அம்பால்
பட்டாங்(கு) அழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறையோவாத் தில்லைசிற்றம் பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே. 3

271.
ஆரே இவைபடுவார் ஐயங் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்
தேரார் விழவோவாத் தில்லைசிற் றம்பலவர்
தீராநோய் செய்வாரை ஓக்கின்றார் காணீரே. 4

272.
காணீரே என்னுடைய கைவளைகள் கொண்டார்தாம்
சேணார் மணிமாடத் தில்லைசிற் றம்பலவர்
பூணார் வனமுலைமெல் பூஅம்பால் காமவேன்
ஆணாடு கின்றவா கண்டும் அருளாரே. 5

273.
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம் பலவர்
வாயினைக் கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே. 6

274.
ஆவா ! இவர்தம் திருவடிகொண்டு அந்தகன்தன்
மூவா உடலழியக் கொன்றுகந்த முக்கண்ணர்
தேவா மறைபயிலும் தில்லைச்சிற்றம் பலவர்
கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே. 7

275
என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன்
மன்னும் முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச் சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார் இம் முத்தரே. 8

276.
முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற்றம் பலவர்
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே. 9

277.
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று
மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச்
சேக்காத லித்தேறும் தில்லைச்சிற்றம்பலவர்
ஊர்க்கேவந்(து) என்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்! 10

278.
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னைப் புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங்கு இனிதா இருப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்