சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு உரிய விரத நாட்களுள் பிரதோஷமும் ஒன்றாகும். இது சிவ வழிபாட்டுக்கு சிறப்பு வாய்ந்த நாளாக காணப்படுகிறது.
பிரதோஷம் என்றால் என்ன
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய விசேட விரத நாள் ஆகும்.
அதாவது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பிரதோஷம் உருவான வரலாறு
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைய தீர்மானித்து, மந்தரம் எனும் மலையை மத்தாகவும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள உள்ள வாசகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு ஒரு புறம் அசுரர்களும் மறுபுறம் தேவர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைய முயற்சித்தனர்.
அப்போது மந்தரமலை கடலில் மூழ்க ஆரம்பித்தது. அதனால் திருமால் கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று மந்திர மலையை தன்னில் தாங்கிக் கொண்டார். பின்னர் அசுரர்களும் தேவர்களும் மீண்டும் திருப்பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.
கடையும் பொழுது வலி தாங்க முடியாத வாசுகி பாம்பானது தனது ஆலகால விடத்தை கடலிலே கக்கியது. அந்த நச்சுத்தன்மையின் வீரியத்தால் அசுரர்களும் தேவர்களும் அச்சம் அடைந்து சிவபெருமானிடம் உதவியை நாடி சென்றனர்.
சிவபெருமான் அவர்களை காத்தருளும் பொருட்டு அந்த கொடிய ஆலகால விடத்தை எடுத்து உட்கொண்டார்.
உமாதேவியார் அதனை சிவபெருமானின் வயிற்றிற்குள் செல்ல விடாது, அவரது கழுத்தில் தடுத்து நிறுத்தினார். இந்நிகழ்வுகள் நடந்த நாளே பிரதோஷ நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரதோஷ பூஜை
பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
அதாவது, நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணங்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.