திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் வட்டம் மேலூர் கிராமத்தில் இச்சா சக்தியாக அருள்பாலிக்கும் அருள்தரும் திருவுடையம்மன் உடனுறை அருள்மிகு திருணங்கீஸ்வரர் திருக்கோயிலில் நமது சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் சார்பாக 08.05.2022 அன்று காலை 7.00 மணி முதல் 4.00 மணி வரை 22வது உழவாரப்பணி செய்ய சிவபெருமான் கருணை செய்துள்ளார்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி ஆற்றல் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளாக காட்சி தரும் அந்த திருத்தலங்கள் முன்றும் சென்னை அருகில் அமைந்துள்ளன. மேலூர், இது சென்னைக்கு அருகில் மீச்சூரை அடுத்து உள்ளது. இங்குள்ள ஸ்ரீ திருமணங்கீஸ்வரர் உடனுறை திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும் சென்னைக்கு வடதிசையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆதிபுரீஸ்வரர் உடனுறை வடிவுடை அம்மன் ஞானசக்தியாகவும் சென்னை அடுத்த ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீயீஸ்வரர் உடனுறை ஸ்ரீ கொடியிடை அம்மன் கிரியா சக்தியாகவும். என விளக்கி அருள்பாலிக்கின்றனர்.

மேலூரில் பாண்டிய மன்னன் ஒருவனின் உத்தரவுப்படி அம்மன் சிலை வடிக்க சிற்பி ஒருவன் கல் ஒன்றை தேர்வு செய்தான். அதை மலை உச்சியில் இருந்து கீழே கொண்டு வரும் பொழுது பிடி நழுவி உருண்டு பள்ளத்தில் விழுந்த அந்த கல் மூன்று துண்டுகளாக உடைந்து விட்டன. மனம் பதறிய சிற்பி தவறுக்காக தன் கைகளைத் துண்டித்துக் கொள்ளப் போனான்; நில் என்ற அசரீரியுடன் பராசக்தி பிரசன்னமாகி ‘சிற்பியே கல் உடைந்ததற்காக கவலைப் படாதே இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என மூவராக உருக் கொள்ளவே மூன்று பகுதிகளாக கல் உடைந்துள்ளது. மூவரின் சிலைகளாக வடித்து விடு’ என கூறி மறைந்தாள். அதன் படி வடிக்கப்பட்டவை மேற்சொன்ன மூன்று தலங்களில் உள்ள அம்பிகைகள். இன்னொரு விசேஷம் என்னவெனில் இத்தலங்களில் உள்ள ஈசனின் சிவ லிங்கங்கள் மூன்றுமே சுயம்பு ஆகும். சென்னையைச் சுற்றிலும் ஃ போன்று அமைந்துள்ள இத் தலங்களை இணைக்க அந்த காலத்தில் சுரங்கப் பாதை இருந்ததாக தகவல்.

மேலூர் திருவுடையம்மன் கோயில் தல வரலாறு. ஆதிநாளில் அடர்ந்த காடுகட்டின் முட்புதர்களுக்கு மத்தியில் புற்று வடிவத்தில், நாகம் சூழ சுயம்புவாக ஒரு சிவலிங்கம் இருந்ததை கண்டனர் ஊர் மக்கள். மேலும் பசுக்கள் தினமும் தானே அந்த புற்றின் மேல் பால் பொழிவதையும், நாகங்கள் சில அப்பாலை குடித்து செல்வதையும் பார்த்தனர். அதன்பின் சுயம்பு லிங்கத்திற்கு கோயில் எழுப்பி திருமணங்கீஸ்வரர் என திருநாமதுடன் வழிபட்டுக்கு கொண்டு வந்தார்கள் ஊர் மக்கள். இப்போது ஸ்ரீதிருமணங்கீஸ்வரர் ஐம்பொன் கவசம் அணிந்து கண்கவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஸ்ரீதிருவுடையம்மன் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கோயில் அழகிய கிராமத்தின் மத்தியில் பழைமை மாறாமல் உள்ளது. திருவுடையம்மன் தரிசனம் மனதிற்கு பெரும் நிறைவை தரும்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி மூலவர் ஆதிபுரிஸ்வரரும் ஒரு சுயம்பு மூர்த்தம் தான். இங்குள்ள அம்பாள் வடிவுடை நாயகி தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுகிறது . அன்னை சன்னதியில் நிற்பதே ஒரு ஆனந்த பரவசம் தான் என்கின்றனர் பக்தர்கள். திருவொற்றியூர் ஒரு பாடல் பெற்ற தலம். நாயன்மார்களில் ஒருவரான கலயனார் அவதரித்த தலமும் கூட. சுந்தரமூர்த்தி நாயனார் – சங்கிலி நாச்சியார் திருமணம் நிகழ்ந்தது இங்குதான். பட்டினத்தார் முக்தி அடைந்த தலம். வள்ளலார் வாழ்ந்த மண் என பல பெருமைக்குரியது.