சித்ரா மாதவன்

ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர். 

நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட  பகுதி “சென்னை தறிப் பேட்டை’  என்று அழைக்கப்பட்டு “சிந்தாதிரிப்பேட்டை’ ஆனது.  1743-இல் கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷ் பணியாற்றிய ஆதியப்ப  நாராயண செட்டி என்பவரின் நிதி உதவியால் இங்கு ஆதிபுரீஸ்வரர், ஆதி கேசவ பெருமாள், ஆதி விநாயகர்  ஆகிய ஆலயங்கள் கட்டப்பட்டன. 

ஆதிபுரீஸ்வரர் கோயிலின் கல் மண்டபம், தூண்கள் ஆகியவை விஜய நகர கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளன. ஒரு கல் மண்டபத்தின் வாயிற் பகுதி மட்டுமே காணப்படுகிறது. நுழைவாயிலின் வலதுபுறத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்னால்  ரத்னவேல் செட்டியார் என்ற பக்தரால் கட்டப்பட்ட கல்யாண மண்டபம் உள்ளது. 

கர்ப்பக்கிரகத்தில் பெரிய சிவ லிங்கம் மற்றும் லிங்க பீடம் (ஆவுடையார்) . தனி சந்நிதியில் திரிபுரசுந்தரி,  பைரவர், பிரகார கணபதி,  சேரமான் பெருமாள் போன்ற நாயன்மார்கள், சரஸ்வதி, சுப்ரமண்யர், தர்ம சாஸ்தா, மற்றும் அவரது அடியார்கள், புஷ்கலா மற்றும் நவக்கிரகம் போன்ற பல தெய்வங்கள் 
உள்ளன.  

மண்டபம் மற்றும் தூண்கள் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக இரண்டு தமிழ் கல்வெட்டுகள் 1782 மற்றும் 1874  இல் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இது மண்டபத்தின் கட்டுமானத்தை பதிவு செய்கிறது. இக்கோயிலின் தல விருட்சம் கடம்ப மரம்.

இக்கோயிலில் நடைபெறும் ஏராளமான திருவிழாக்களில் மிக முக்கியமானது,  சித்திரை மாதத்தில் நடைபெறும் புனித திருக்கல்யாண பிரம்மோற்சவம். இது பெரும்பாலான கோயில்களில் வழக்கமாக கொண்டாடப்படும் பத்து நாள் திருவிழாஅல்ல.  பதினைந்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும்.  

இதில் மூன்றாவது நாளன்று நடைபெறும் அதிகார நந்தி வாகன ஊர்வலம் ஆசியாவிலேயே மிகப் பெரியது.  இந்த பிரம்மோற்சவத்தின் மற்றொரு சிறப்பு பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜார்ஜ் டவுனில் உள்ள கந்தகோட்டம் கோயிலில் இருந்து முருகப் பெருமான்
மயில் வாகனத்தில் வந்து பிற்பகல் 2மணி முதல் இரவு 7.30 மணிவரை இங்கு காட்சியளிப்பார். 

நன்றி தினமணி

திருக்கோயில் கூகுள் மேப் லிங்க்