சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் பகைவார்களாலும் போர்களினாலும் பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வந்தான். சிறந்த சிவனடியரான மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் தான் இருக்கும் இடத்தினை அடையாளம் காட்டி, அங்கே தனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபாடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படியே சிவபெருமானுக்கு கருங்கற்களால் ஆலயம் எழுப்பி வழிபட்டு வந்தான். அதன்பின் அந்த மன்னனுக்கு போர்களில் வெற்றியும் பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன. அது முதல் இத்தலத்து இறைவன் பட்டமுடீஸ்வரர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

தொண்டைவளநாட்டில் பழம்பெரும் பதியான காஞ்சி மாநகருக்கு வடபாலாய் அமைந்துள்ள பிச்சிவாக்கம் கிராமத்தில் திருமண வரம் குழந்தைவரம், நோய் தீர்க்கும் தவம் பற்றி

யெல்லாம் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால் பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும் இறைவன் குடியிருக்கும் ஆலயம் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இச்சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ள பிச்சிவாக்கம் பட்டமுடீஸ்வரர் கோவில் இந்த ஆலயம் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொன்மை சிறப்பு : இன்றைய பிச்சிவாக்கம் பழங்காலத்தில் பிச்சிபாக்கம் என்றேஅழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி பிச்சிவாக்கம் என்றானது.

சோழ மன்னர்களின் காலத்தில் இக்கோவில் மிகவும் சிறப்புடன் விளங்கியதை அறிய முடிகிறது. பார்த்திவேந்திர வர்மன் காலத்து (கி.பி.956-969) மூன்று கல்வெட்டுகள் இதை உறுதி செய்கின்றன. பார்த்திவேந்திரவர்மன் இப்பகுதியை ஆண்டு வந்த சிற்றரசன் என்றும், ராஜராஜசோழனின் சகோதரன் என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் பிச்சியாக்கம் என்றபகுதி காஞ்சிபுரத்து காமகோட்டபுறம் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே இவ்வூர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலைச் சார்ந்த நிலங்கள் நிறைந்த ஊராக இருந்திருக்க வேண்டும். தாமர் கோட்டத்து அசம்பழகை விளத்தூர் கிழவன் என்பவன் மண்டபம் எழுப்பிய செய்தியும், அந்த மண்டபம் பராமரிப்புக்கென நிலங்களை விலைக்கு வழங்கி கொடையளித்த செய்தியும் தெரிய வருகிறது. எனினும் ஆலயத்தின் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. இவ்வாலயத்தில் விளக்கெரிக்க சோழக்கோன் படுக்கன், ஆடுங்கூத்தன் படுக்கன், கோமானிக்கோன் பொன்னம்பி நாராயணக்கோன் ஆகிய இடையர்களிடம் பசுக்களும், ஆடுகளும் வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டு மூலமாக அறிய முடிகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் இதன் பழமைத் தன்மையைப் பறைசாற்றுகின்றன. சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் எழிலுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

மூலவர் பட்டமுடீஸ்வரர் ஆலயம் கருவறைமுகப்பில் இரண்டு துவார பாலகர்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருமே தங்களது ஆட்காட்டி விரலால் உள்ளிருக்கும் இறைவனைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இவர்கள் உள்ளே இறைவன் இருக்கின்றான் என சொல்கின்றனரா அல்லது உலகின் ஒரே இறைவன் இவனே என்று கூறவிரும்புகின்றனரா என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆலயத்தின் பின்புறம் பெரிய உருளை வடிவத்தூணில் ங்கோத்பவர் கோலம் படைப்புச் சிற்பமாகப் புதுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கூழமந்தல் சோளீஸ்வரர் ஆலயத்தினை நினைவுப்படுத்துகின்றது. தட்சிணாமூர்த்தியின் உருவமும் கலைநயத்துடன் அமைந்துள்ளது. இதன் மற்றொரு சிறப்பாக இவரின் எதிரே கல் ஜன்னல் அமைந்துள்ளது. இந்த தட்சிணாமூர்த்தியை ஆலயத்தின் வெளியில் இருந்தே தரிசிக்கலாம். தெற்கு நோக்கிய பிரதான வாயிலும், கிழக்கு நோக்கிய வழியும் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் நாயகன் பட்டமுடீஸ்வரர் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். பெரிய உருவில் கம்பீரமாகக் காட்சி தருவது இவரது சிறப்பு. தன்னை மனமுருகி வழிபாடுவோருக்குப் பட்டத்தையும் பதவியையும் தருபவர் இவரே. இந்த ஐதீகத்திற்கு ஏராளமான சான்றுகளை ஊர் மக்கள் குறிப்பிடுகின்றனர். இக்கருவறைக்குள் மூலவரின் பின்புறம் சிறிய வடிவில் அம்மன் உருவம் அமைந்துள்ளது. 


திருச்சிற்றம்பலம்