சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்

தேடித் திரிந்து சிவபெரு மான்என்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.

திருச்சிற்றம்பலம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுகாவில் அழிசூர் கிராமத்தில் மிகவும் பழைமையான ஸ்ரீஅம்புஜகுசாலாம்பாள் சமேத அருளாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்திருக்கோயிலானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. முற்காலத்தில் அழிஞ்சல் மரங்கள் நிறைந்ததாக இப்பகுதி விளங்கியதால், அழிஞ்சூர். இப்பெயர் காலப்போக்கில் மருவி அழிசூர் என்று தற்போது வழங்கப்படுகிறது. இங்குள்ள திருக்கோயில் சோழர் காலத்திற்கும் முற்பட்ட திருக்கோயிலாகும்.

இறைவனின் திருப்பெயர் அருளாளீஸ்வரர், அருளாளீஸ்வரமுடைய நாயனார் என்றும், ஊர்ப் பெயரினை அழிசியூர் என்றும் இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இப்பெருமானை அகத்தியர் வந்து வணங்கியதாகவும் மேலும் எண்ணற்ற சித்தர்கள் வணங்கியதாகவும் கூறுகின்றனர்.

இந்தத் திருக்கோயில் அருகே நடப்பட்டுள்ள பலகைக் கற்களாலான கல்வெட்டு விக்கிரம சோழனின் 5வது ஆட்சியாண்டு குறிப்பைத் தெரிவிக்கின்றது. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில்  கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியன முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. கருவறையின் தளவரிசை முற்றிலும் கீழே விழுந்து மேற்புறம் தகர ஷீட் அமைத்து மூடப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தென்புறம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. திருக்கோயிலின் வடபுறம் முற்றிலும் சரிந்து சுவற்றின் எச்சங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அம்பாள் சன்னிதி முற்றிலும் சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. திருக்கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் இருந்த ஆறுமுகப்பெருமான் சன்னிதியும் முற்றிலும் இடிந்து கீழே விழுந்துள்ளது. நந்தி மண்டபம், பலிபீடம், கொடி மரம் ஆகியனவும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

பல ஆண்டுகள் பராமரிப்பின்றியும் முறையாக வழிபாடு இல்லாமலும் காணப்படும் இவ்வாலயம் மீண்டும் இங்கு தங்குதடை யின்றி பூஜைகள் நடைபெற தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

திருப்பணி செய்வதன் அவசியம்

இத்திருக்கோயிலுக்குத் திருக்குடமுழுக்கு செய்து சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலானதால், தற்போது திருக்குட முழுக்கு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். இத்திருக்கோயில் மூலவர் சன்னிதி, அர்த்தமண்டபம், மகாமண்டபம், அம்பாள் சன்னிதி, ஆறுமுகப்பெருமான் சன்னிதி ஆகியன முற்றிலும் சிதிலமடைந்து கீழே விழுந்துள்ளதால் இவற்றை முழுவதுமாகப் பிரித்தெடுத்து பழமை மாறாமல் நிர்மாணிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு பழமையான ஆலயத்தில் நமது சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம் உழவாரப் பணி செய்தது சிவபெருமான் கருணையே. சிவ சிவ

திருச்சிற்றம்பலம்.

ஆலயத் தொடர்புக்கு

அன்பழகன்  – 9787675351

கோட்டீஸ்வரன் – 6369608095


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்