சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

எழுதிய போற்றிப் பஃறொடை

உமாபதி சிவாச்சாரியார்

பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன்
மாமன்னு சோதி மணிமார்ப – னாமன்னும்
வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன்
நாதநா தாந்த நடுவேதம் – போதத்தால்
ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச்
சேம வொளியெவருந் தேரும்வகை – மாமணிசூழ்
மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலைபோற்றி – குன்றாத
பல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து
மெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.

அந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து
வந்த பெரிய வழிபோற்றி – முந்துற்ற
நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந்
தொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு – மெல்லாம்
ஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய்
அருவமா யெவ்வுயிரு மார்த்தே – யுருவுடைய
மாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத்
தானடக்குங் காட்டத் தகுதியும் போன் – ஞானத்தின்
கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால்
எண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக்
கட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற்

பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் – முற்பால்
தனுகரண மும்புவன முந்தந் தவற்றான்
மனமுதலாவந்தவிகா ரத்தால் – வினையிரண்டுங்
காட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி – நாட்டுகின்ற
வெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப்
பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்
புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால்
எல்லைப் படாவுதரத் தீண்டியதீப் – பல்வகையா

லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால்
எங்கேனுமாக வெடுக்குவென – வெங்கும்பிக்
காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்
கேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு – மாசறவே
செய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க
வையவழி யேகொண் டணைகின்ற – பொய்யாத
னல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப
நல்ல வறிவொழிந்து நன்குதீ – தொல்லையுறா
வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித்
துக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ்.

சிந்தையுருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் – பந்தித்த
பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறிபோற்றி – பாசற்ற
பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து
நாளுக்கு நாட்சகல ஞானத்து – மூள்வித்துக்
கொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று
பண்டாரி யான படி போற்றி – தண்டாத
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில்
அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி – முன்புள்ள

உண்மை நிலைமை யொருகா லகலாது
திண்மை மலத்தாற் சிறையாக்கிக் – கண்மறைத்து
மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக்
கால நியதி யதுகாட்டி – மேலோங்கு
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்தவராக மவைமுன்பு – தந்த
தொழிலறி விச்சை துணையாக மானி
நெழிலுடைய முக்குணமுமெய்தி – மருளோடு
மன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள்
இன்ன பொருளென் றியம்பவொண்ணா – வந்நிலை போய்க்

கண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்
கொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் – பண்டை
யிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள்
மருவும்வகை யங்கே மருவி – யுருவுடனின்
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்
போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி – நீங்காத
முன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள்
துன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ – லந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர்
ஆக்கிப் பணித்த வறம் போற்றி – வேட்கைமிகு

முண்டிப் பொருட்டா லொருகா லவியாது
மண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர்
வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல்
எல்லா முடனே யொருங்கிசைந்து – செல்காலை
முட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு
பட்டோ லை தீட்டும் படிபோற்றி – நட்டோ ங்கு
மிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா
மன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் – முன்னுடைய
நாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண்
வாணாளின் மாலா யயனாகி – நீணாகர்
வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
நானா விதத்தா நலம் பெறுநாள் – தான்மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும்

இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து
நல்லதோ ரின்சொ னடுவாகச் – சொல்லியிவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு – மையறருஞ்
செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந்
தக்கநெருப் புத்தூண் தழுவுவித்து – மிக்கோங்கு
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து
மீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் – பேராமல்
அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
வெங்கோப மாறாத வேட்கையரா – யிங்கொருநாள்
எண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம்
பன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு – முன்னாடிக்
கண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக்
கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் – மண்டெரியிற்
காச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய
மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் – வாய்த்த நெறி

யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே
நீடுபெரும் பாவமின்றே நீங்குமென – நாடித்தன்
மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக
நஞ்சனைய சிந்தை நமன்றூதர் – வெஞ்சினத்தால்
அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க
வல்ல கருணை மறம்போற்றி – பல்லுயிர்க்கும்
இன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி
முன்னைமுத லென்ன முதலில்லோ – நல்வினைக்கண்
எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு
செல்காலம் பின்னரகஞ் சேராமே – நல்லநெறி
யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல்

உய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் – பையவே
மட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண்
மொட்டா யுருவா முறைபோலக் – கிட்டியதோர்
நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை
யெல்லை யிரண்டு மிடையொப்பிற் – பல் பிறவி
யத்தமதிலன்றோ வளவென்று பார்த்திருந்து
சத்தி பதிக்குந் தரம் போற்றி – முத்திதரு
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு
மந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் – பின்னன்பு

மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந்
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை – யன்னவனுக்

காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ்
சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் – பாதியாம்
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
வைச்ச நதியு மதிக் கொழுந்து – மச்சமற
வாடு மரவு மழகார் திருநுதன்மேல்
நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் – கேடிலயங்
கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும்
பூட்டரவக் கச்சும் புலியதளும் – வீட்டின்ப
வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார்
உள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் – கள்ளவினை

வென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும்
ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி – யென்றும்
இறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து – நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று
பேரிலா நாதனொரு பேர்புனைந்து – பாரோர்தம்

உண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி – மிண்டாய
வாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற்
பேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் – தேறாத
சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்
அத்தகைமை தானே யமையாமல் – வித்தகமாஞ்
சைவ நெறியிற் சமய முதலாக
வெய்து மபிடேக மெய்துவித்துச் – செய்யதிருக்
கண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட
புண்ணு மிருவினையும் போயகல – வண்ணமலர்க்

கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி – யொத்தொழுகுஞ்
சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்
காணா தொழியுங் கணக்கேபோ – லாணவத்தின்
ஆதி குறையாம லென்பா லணுகாமல்
நீதி நிறுத்து நிலைபோற்றி – மேதக்கோர்
செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்
எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து – மெய்யன்பாற்
காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு
நாணத் தகுஞான நன்னெறியை – வீணே

யெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு
மனக்கு மலரயன்மால் வானோர் – நினைப்பினுக்குந்
தூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல்
ஆரும் படிதந் தருள்செய்த – பேராளன்
தந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய்
வந்து புணரா வழக்காக்கி – முந்தியென்றன்
உள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங்
கள்ளமின்று காட்டுங் கழல்போற்றி – வள்ளன்மையால்
தன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த
வென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும்

வண்ண முருவ மருவுங் குணமயக்கம்
எண்ணங் கலைகாலமெப்பொருளு – முன்னமெனக்
கில்லாமை காட்டிப்பின்பெய்தியவா காட்டியினிச்
செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி – யெல்லாம்போய்த்
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி
யெம்மைப் புறங்கூறி யின்புற்றுச் – செம்மை
யவிகாரம் பேசு மகம்பிரமக் காரர்
வெளியா மிருலில் விடாதே – யொளியாய்நீ
நின்ற நிலையே நிகழ்த்தி யொருபொருள்வே
றின்றியமை யாமை யெடுத்தோதி – யொன்றாகச்

சாதித்துத் தம்மைச் சிவமாக்கி யிப்பிறவிப்
பேதந் தனிலின்பப் பேதமுறாப் – பாதகரோ
டேகமாய்ப் போகாம லெவ்விடத்துங் காட்சி தந்து
போகமாம் பொற்றாளி நுட்புணர்த்தி – யாதியுடன்
நிற்க வழியா நிலையிதுவே யென்றருளி
யொக்க வியாபகந்தன் நுட்காட்டி – மிக்கோங்கு
மாநந்த மாக்கடலி லாரா வமுதளித்துத்
தான்வந்து செய்யுந் தகுதியினால் – ஊனுயிர்தான்
முன்கண்ட காலத்து நீங்காத முன்னோனை
யென்கொண்டு போற்றிசைப்பேன் யான்

போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்
போற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் – போற்றியெங்கள்
வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற
சம்பந்த மாமுனிபொற் றாள்.

போற்றிப் பஃறொடை முற்றும்


திருச்சிற்றம்பலம்