வேதமாய் வேதத்தின் முதல்வனாய், நாதமாய் நாதத்தின் மூலமாய் , போதமே அருளிடும் புனிதனாய் விளங்கிடும் நம் பரம்பொருளின் திருவருளைப் பெற செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் அரையப்பாக்கம் என்ற கிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீ அருணாம்பிகை உடனாய ஸ்ரீ அருணாதீஸ்வரர். இந்த இறைவன் சூரியனுடைய ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை இயக்குகின்ற சாரதியாக விளங்கும் ஸ்ரீ அருணன் வழிபட்ட ஆலயம் என்பதால் அவன் பெயராலேயே ஸ்ரீஅருணாதீஸ்வரர் என்று வழங்கப்படுகிறார். இன்று வரையில் தினசரி காலையில் இறைவன் கருவறையில் இறைவன் மீது சூரிய கதிர்கள் விழுகின்ற அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அருணன் என்பவன் ராமாயணத்தில் வரக்கூடிய ஜடாயு பட்ஷியின் தந்தையாவார். இந்த சிறப்பு வாய்ந்த  சிவ ஸ்தலத்தில் கடந்த 2014ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது புதர் மண்டிக்கிடந்த பாழடைந்த ஆலயத்தை பல அடியார்களின் துணையை நாடி ஆலயத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திய இளைஞர்  மதன்குமார். அப்போது ஆலயத்திற்கு ஒரு வண்ணம் மட்டுமே அடிக்கப்பட்டது. தற்சமயம் அந்த வண்ணம் அனைத்தும் வெயிலில் உரிந்துபோய் ஆலயம் மங்கிப்போய் வெறும் சிமெண்ட் கலவையாக காட்சியளிக்கிறது எனவே இந்த ஆலயத்திற்கு பஞ்சவர்ண வண்ணம் அடிக்க வேண்டும் என்று மதன்குமார் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 – சிவபெருமான்.காம்