சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.114 திருமாற்பேறு

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மால்வணங்குமீசர், தேவியார் – கருணைநாயகியம்மை.

பண் – வியாழக்குறிஞ்சி

1228

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.-1.114.1

1229

பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.-1.114.2

1230

கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.-1.114.3

1231

தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.-1.114.4

1232

துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.-1.114.3

1233

பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.-1.114.4

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.-1.114.5

1234

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.-1.114.8

1235

செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.-1.114.9

1236

குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.-1.114.10

1237

அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே.-1.114.11

திருச்சிற்றம்பலம்