சித்தத்தை சிவன்பாலே வைத்தார்கள்

உயர்பற்று அற்றுச் சிவனையே சிந்திப்பவர் மூலாதாரத்தில் இருந்து குண்டலினியை ஆரூதாரம் வழியே மேலேற்றுவார்கள். பிரம்மேந்திரத்தின் மேல் ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரை மீது நடிக்கும் தெய்வத்திருநடனம் கண்டு ஆனந்த அமுதுண்டு களிப்பார்கள். பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேசன், சதாசிவன் என்ற காரணக் கடவுளர் ஐவருக்கும் முறையே உரிய இருதயம், கண்டம், உள்நாக்கு, புருவமத்தி, பிரம்ம மந்திரம் என்ற  ஸ்தானங்களைக் கடந்து மேலே சென்று நிறைவுடையதாய், மெய்ப்பொருளாய், சுடர்சோதியாய் உள்ள ஒளிமயமானது ஞானஒளி வீசித் திகழும் நாதாந்தத்தில், சிவயோக நெறியில் சித்தத்தை சிவன்பாலே வைத்திருப்பார்கள். இவ்வாறு பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் சிவபெருமானுடைய திருத்தொண்டின் வழியிலே நின்று அவரை அடைந்தவர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்