திருநீலகண்டக்குயவ நாயனார்

   தில்லைப்பதியில் வேட்கோவக்குலத்திலே தோன்றியவர். பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்யத் தானே உட்கொண்டு அடக்கிய பேரருளாளனாகிய சிவபெருமானை எண்ணி அவனது கண்டத்தினைத் திருநீலகண்டம் என இடைவிடாது ஓதும் இயல்பினராதலால் இவர் திருநீலகண்டர் எனப் போற்றப்பெற்றார். குயவர் மரபினராகிய இவர் சிவனடியார்களுக்கு திருவோடு அளித்தலையே தமது தொண்டாகக் கொண்டிருந்தார். இளமைமீதூரப் பெற்ற இவர் இன்பத்துறையில் எளியராய் ஒரு நாள் பரத்தையரில்லத்துச் சென்று மீண்டார். அதனை அறிந்த இவருடைய மனைவியார் இவருடன் ஊடல் கொண்டவராய் “எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டன்” என்றார். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனைவியார் “என்னை தீண்டுவீராயின்” என்னாது “எம்மைத் தீண்டுவீராயின்” எனப் பன்மையில் ஆணை கூறியமையால் தம் மனைவியை தவிர பிற மாதர்களையும் என்தன் மனத்தாலும் இனி தீண்டமாட்டேன் என உறுதி கொண்டு வாழ்ந்தார். அவர் தம் மனைவியாரும் தம் கணவரைத் தீண்டாது இல்லறக் கடமைளை ஒழுங்காகச் செய்து வாழ்ந்தார். கணவன் மனைவி இருவரும் தமது பிணக்கினை அயலவர் அறியாதவாறு இல்லறக் கடமைகளை முறைப்படி செய்து சிவனடியார்களைப் பேணிப் போற்றினர்.

   இவ்விருவரது உள்ளத்தின் உறுதியை உலகத்தோர் அறிந்து போற்றுதல் வேண்டும் எனத் திருவுளங்கொண்ட சிவபெருமான் சிவயோகியார் வடிவில் திருநீலகண்டரை அடைந்து தம் கையிலுள்ள திருவோடு ஒன்றனைக் கொடுத்துப் பாதுகாத்து வைக்கும்படி சொல்லிச் சென்றார். சென்ற சிவயோகியார் சில நாட்கள் கழித்து திருநீலகண்டக்குயவனாரை அடைந்து தாம் கொடுத்த ஓட்டினைத் தரும்படி கேட்டார். திருவோடு வைத்த இடத்திற் காணாமையால் செய்வதறியாது வருந்திய திருநீலகண்டயக்குயவனார் சிவயோகியாரைப் பணிந்து வேறு புதியதொரு திருவோடு தருவதாகக் கூறினார். சிவயோகியார் மிகவும் வெகுண்டு, “நீர் உமது மனைவியின் கையைப் பற்றி நீரிலே மூழ்கி, நாங்கள் திருவோட்டை எடுத்துக் கொள்ளவில்லை” என்ற சத்தியஞ்செய்வீராக” என்றார். திருநீலகண்டநாயனாரும் தமது மனைவியுடன் தில்லையில் திருப்புலீச்சரத் திருக்கோயிலின் எதிரிலுள்ள திருக்குளத்தை அடைந்து ஒரு கோலைப் பற்றிக் கொண்டு முழுகப் போனார். அந்நிலையிற் சிவயோகியார், “மனைவியின் கையைப் பற்றிக் கொண்டு நீரில் மூழ்குவீராக” என வற்புறுத்தினார், நாயனார் அவ்வாறு செய்தற்குத் தடையாகத் தங்களிடையேயுள்ள சபதத்தை அங்குள்ளார் கேட்ப எடுத்துச் சொல்லித் தம் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கி எழும் நிலையில் அவ்விருவரும் முதுமை நீங்கி இளமை பெற்றுத் தோன்றினார்கள். சிவயோகியராக வந்த இறைவர் மறைந்து அம்மையப்பராக விடைமேல் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினார். இளமை பெற்ற இவ்விருவரும் இவ்வுலகில் திருப்பணிகள் புரிந்து பின்பு சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் உற்றார்கள்.

திருச்சிற்றம்பலம்