மூர்த்தி நாயனார்

பாண்டி நாட்டில் மதுரை மாநகரில் வணிகர் குடியிலே தோன்றியவர் மூர்த்தியார். உலகப்பற்றினை அறுத்து இறைவன். திருவடிகளையே மெய்ப்பற்று எனப் பற்றிய இப்பெருந்தகையார் திருவாலவாய் இறைவர்க்கு நாள்தோறும் சந்தனம் அரைத்துத் தருவதை தமது சிந்தைக்க இனிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்தார்.

அக்காலத்தில் வடுகக்கருநாடர் மன்னன் பாண்டி நாட்டினைக் கைப்பற்றி அந்நாட்டின் அரசன் ஆனான். சமணசமயச் சார்புடைய அவன் சிவனடியார் தொண்டுகள் நடைபெறாவண்ணம் பல இடர்கள் செய்து வந்தான். அந்நிலையிலும் மூர்த்தியார் இறைவனுக்குச் சந்தனம் அரைத்துத் தரும் பணியை தடையின்றிச் செய்து வந்தார்.

அதுகண்ட மன்னன் சந்தனக்கட்டை கிடைக்காமல் தடை செய்தான். சந்தனக்கட்டை கிடைக்காவிட்டால் என்ன என்று எண்ணிய மூர்த்தியார் தமது முழங்கையினைச் சந்தனக்கல்லில் வைத்துத் தேய்த்தார்.

அப்போது ஆலவாயிறைவர் திருவருளால் “அன்பனே உன் கையில் உதிரம் ஒழுகும்படி இதனைச் செய்ய வேண்டாம். உன் பணிக்கு இடர் விளைத்த கொடுங்கோல் மன்னன் பெற்ற நாடு முழுதும், நீ பெற்று இந்நாட்டின் துயர்துடைத்து உன் திருப்பணியைச் செய்து நமது சிவலோகத்தை அடைவாயாக” என்று அருள்வாக்கு எழுந்தது. அந்நாள் இரவில் கருநாடர் மன்னன் இறந்தான். அவனுக்கு மைந்தர் இல்லாமையால் தக்க அரசர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கப் பட்டத்து யானையைக் கண்கட்டி விட்டனர் அமைச்சர்கள்.

அந்த யானை மதுரை நகர வீதிகள் எல்லாம் திரிந்து திருவாலவாய்த் திருக்கோயிலின் ஓரத்தில் நின்ற மூர்த்தியாரைத் தன்மேல் ஏற்றிக்கொண்டது. அமைச்சர்கள் மூர்த்தியாரைப் பணிந்து அரசராகும்படி வேண்டினர். அதற்கு இசைந்த மூர்த்தியாரும் திருநீறே அபிடேகப் பொருளாகவும், உருத்திராக்கமே அணிகலனாகவும், சடை முடியே முடியாகவும் கொண்டு மும்மையால் உலகாண்டு பாண்டி நாட்டின் தவவேந்தராக ஆட்சி புரிந்து. பின்னர்ச் சிவபெருமான் திருவடி நிழலிற் பிரியாது உடனுறையும் பெருவாழ்வு பெற்றார்.

திருச்சிற்றம்பலம்