திருமூல நாயனார்

திருக்கயிலாயத்தில் இறைவன் திருவருள் பெற்ற சிவயோகியாராகிய சித்தர்களில் ஒருவர் அகத்திய முனிவரைக் காணப் பொதிகைமலைக்குச் செல்ல விரும்பினார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி முதலிய தலங்களைக் பணிந்து திருவேகம்பப் பெருமானை இறைஞ்சி்த் தில்லையம்பலத்தில் திருக்கூத்துத் தரசனங்கண்டு காவிரியில் நீராடி அதன் தென்கரையில் திருவாவடுதுறையினை அணுகி இறைவனை வழிபட்டார்.

அங்கிருந்து புறப்பட்டுக் காவிரிக்கரையை அடைந்த போது பசுச்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலன் என்னும் ஆயன் திடீரென இறந்தானாக. அவனால் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனைக் சுற்றிக் கதறின. “இவர் உயிர் பெற்று எழுந்தால் அன்றி இப்பசுக்கள் துயரம் தீராது” என எண்ணிய சிவயோகியார். தம்முடைய உடம்பினைப் பாதுகாவலான இடத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் சித்தித்திறத்தால் தமது உயிரை ஆயன் உடம்பில் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். பசுக்கள் மகிழ்ந்தன. மாலைப்பொழுது வந்ததும் தத்தம் உறைவிடத்திற்கு திரும்பிச் சென்றன. திருமூலர் அவற்றின் பின்னே சென்றார். மறுநாள் தமது பழைய உடம்பினை பாதுகாத்துவைத்திருந்த இடத்திற்கு வந்து பார்த்தார். இறைவனருளால் அவ்வுடம்பு மறைக்கப்பட்டது. அதனால் மூலன் உடம்பிலேயே இருந்து திருமூலராகித் திருவாவடுதுறையிலுள்ள திருக்கோயில் அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்திருந்தார். என்னைத் திருமூலன் உடம்பினுல் புகுத்திய இறைவனது அருள் நோக்கம் தமிழாகத்தால் தன்னியல்பினை நன்றாக உணர்த்துதற் பொருட்டே எனத் தெளிந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடலாகத் தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திரமாலையை அருளிச் செய்து திருக்கயிலையை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்