இளையான்குடி மாற நாயானார்

இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழவு தொழிலால் செல்வம் படைத்தவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார்களிடத்தும் பேரன்பு உடையவர். மனைவியாருடன் விருந்தோம்பும் பண்பினராகிய மாறனார் சிவனடியார்களுக்கு நாற்தோறும் அறுசுவை அமுது படைத்து வந்தார். நாளடைவில் செல்வம் சுருங்கி வறுமை எய்திய காலத்திலும் தம்முடைய உடைமைகளை விற்றும் இத்தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு நாள் முழுவதும் விடாத மழை பெய்தது. வீட்டில் உணவுப் பொருள் இன்மையால் மாறனாரும் மனைவியாரும் கடும்பசியுடையவராய் உறக்கமின்றித் தெருக் கதவைத் தாளிட்டு இருந்தனர். அந்த நள்ளிரவிலே சிவபெருமான் அடியார் வேடம் பூண்டு இளையான்குடி மாறர் இல்லத்தை அடைந்து, “மிகுந்த பசியாயிருக்கிறது, அன்னம் இடுதல் வேண்டும்” என்றார். உடனே மாறனார் சிவனடியாரை வீட்டில் அமரச் செய்து அன்று பகலில் தாம் உழுது விதைத்த செந்நெல்லின் முளைகளை அள்ளிக் கொண்டு வந்து மனைவியாரிடம் கொடுத்தார். வீட்டுக் கூரை அலகுகளைப் பிடுங்கி அடுப்பு மூட்ட அளித்தார். மனைவியாரும் விரைந்து நெல்லை வெதுப்பிக் குற்றி அரிசியாக்கித் திருவமுது சமைத்தார். கொல்லையில் முளைத்த கீரையைக் கறி சமைத்தார். உறங்குவது போன்றிருந்த அடியாரை எழுப்பி “சுவாமி, திருவமுது செய்தருளவேண்டும்” என மாறனார் வேண்டிக்கொண்டார். அந்நிலையில் அங்கு அடியவராக எழுந்தருளிய சிவபெருமான் பேரொளிப் பிழம்பாகக் காட்சியளித்து இளையான்குடி மாறனார்க்கும் அவர் தம் மனைவியார்க்கும் பேரின்பப் பெருவாழ்வை நல்கியருளினார்.

திருச்சிற்றம்பலம்