அமர்நீதி நாயனார்

சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலில் பெரும் செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு போர்வையும், கோவணமும் அளிக்கும் தொண்டினை மேற்கொண்டிருந்தார்.

ஒரு நாள் சிவபெருமான் அமர்நீதிநாயனாரின் அடியார் பக்தியினை உலகம் அறிந்து உய்யும் பொருட்டு, அந்தணர் குலத்துப் பிரமசாரியாராக அவரை அடைந்து தம்மிடமிருந்த கோவணம் ஒன்றனை அவரிடம் தந்து நீராடி வருவதாகச் சொல்லிச் சென்றார்.

அமர்நீதியாரும் அவர் தந்த கோவணத்தை வாங்கி வைத்துக் கொண்டார். நீராடச் சென்ற அந்தணர் மழையில் நனைந்து வந்து தாம் கொடுத்த கோவணத்தைக் கொண்டு வரும்படி நாயனாரைக் கேட்டார். அமர்நீதி நாயனாரும் அக்கோவணத்தைப் பாதுகாப்பாக வைத்த இடத்திற்காணாது, எங்கு தேடியும் கிடைக்காமையால் திகைப்புற்றார்.

அதனினும் நல்லதாய் புதிய கோவணம் தருவதாகக் கூறினார். அது கேட்ட அந்தணர் சினமுற்று “நான் முன்கொடுத்த கோவணத்திற்கு ஈடாக மற்றொரு கோவணம் என்னிடம் உள்ளது, அதற்கு ஈடாக நிறையுள்ள கோவணம் உம்மிடமுள்ளதாயின் கொடுத்தால் போதும்” என்றார்.

அவர் கூறியபடி நிறைகோல் கொணர்ந்து நிறுத்தி ஒரு தட்டில் அந்தணர்பாலுள்ள கோவணத்தை வைத்து அதற்கு ஈடாகத் தம்பாலுள்ள கோவணம் ஆடை பொன் முதலியவற்றை வைத்தும் நிறையவில்லலை. அதனால் தாமும் தம் மனைவியாரும் மற்றும் குழந்தையும் ஆக தராசு தட்டில் ஏறி வானுலகம் தொழுது போற்றச் சிவலோகத்தை அடைந்து பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்கள்.

திருச்சிற்றம்பலம்