குங்குலியக் கலய நாயனார்

திருக்கடவூரில் மறையவர் குலத்தில் தோன்றிய இவர். திருக்கடவூர் வீரட்டத்தில் நாள்தோறும் குங்குலியத்தூபம் இடும் பணியினைத் தவறாது செய்து வந்தார்.

வறுமை நிலை வரவே மனைவி மக்கள் பசியினால் வருத்தமுற்றனர். மனைவியார் நெல் வாங்குவதற்கு தமது திருமாங்கலியத்தை கழற்றி தந்தார். அத்திருமாங்கலியத்தை விற்று எதிரே வந்த குங்குலியத்தை வாங்கித் திருக்கோயிலுக்குச் சென்று குங்குலியத் தொண்டு புரிவராயினர்.

அந்நிலையில் கடவூர் இறைவன் திருவருளால் இவரது இல்லத்தில் வேண்டும் பொருட்கள் வந்து நிரம்பின. வறுமை நீங்கப் பெற்ற குங்குலியக்கலயனார் திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெயருடைய அம்மையின் வழிபாட்டிற்கெனச் சாய்ந்திருந்த சிவலிங்கத்தைத் தம் கழுத்தில் கயிற்றால் கட்டி இழுத்து நிமிரத் செய்தார்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்துடன் திருக்கடவூர் இறைவரை வழிபட வந்தபொழுது இவ்விரு பெருமக்களுக்கும் தமது இல்லத்தில் திருவமுது செய்வித்து மகிழும் பேறு பெற்றார்.

திருச்சிற்றம்பலம்