அரிவாட்டாய நாயனார்

சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் தாயனார். இவர் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய இவற்றைச் சிவபெருமானுக்குத் திருவமுது செய்வித்தலை கடமையாகக் கொண்டிருந்தார்.

நாயனார் வறுமைக் காலத்தும் கூலிக்கு நெல்லறுத்துக் கிடைத்த செந்நெல் எல்லாம் சிவனுக்கு உரியது என்று திருவமுது செய்வித்தார். நாயனார் செந்நெல் அரிசி செங்கீரை மாவடு இவற்றைக் கூடையில் சுமந்தவராய், தம் மனைவியார் இறைவனது திருமஞ்சனத்திற்கு ஏற்ற, பால், தயிர் முதலியன கொண்டு பின்னே வர, முன்செல்பவர் கால் இடறிக் கீழே விழுந்தார். சிவனுக்கு அமுதாகிய செந்நெல் அரிசி முதலியன வயல் வெடிப்பில் சிதறி வீழ்ந்தன.

“இவற்றை இறைவன் அமுது செய்தருளும் பேறு பெற்றிலேனே” என வருந்திய நாயனார் தமது கையிலுள்ள அரிவாளால் தமது கழுத்தினை அரிய முற்பட்டார். அந்நிலையில் அம்பலத்தாடும் அண்ணலாரது திருக்கையானது நாயனாரது கையினைப் பற்றிக்கொள்ள இறைவன் மாவடுவினை அமுது செய்யும் நிலையில் விடேல் விடேல் என்னும் ஓசை வயல் வெடிப்பினின்றும் தோன்றியது. இறைவனது அருட்பெருங்கருணையினை அஞ்சலி கூப்பி நின்று நாயனார் இறைவனைப் பரவிப் போற்றினார். சிவபெருமானும் விடைமீது தோன்றித் நாயனார்க்கு அருள்புரிந்தார். “இறைவர் அமுது செய்யப் பெற்றிலேன்” என்ற ஏக்கத்தால் தம் கழுத்தினை அரிவாள் பூட்டி அரிய முற்பட்டமையால் இவர் அரிவாட்டாய நாயனார் என அழைக்கப்பெற்றார்.

திருச்சிற்றம்பலம்