ஆனாய நாயனார்

மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர் குலத்திலே தோன்றியவர் ஆனாயர். பசுக்களை மேய்க்கும் தொழிலினராய், புல்லாங்குழல் ஊதும் இசைப்பயிற்சியில் வல்லவர் இவர்.

சிவனடியில் அன்பு மீதூர்ந்த சிந்தையுடன் இறைவனது திருவைந்தெழுத்தினை புல்லாங்குழலில் வைத்து வாசித்து எவ்வுயிரும் உள்ளம் உருக இசைப்பது தமது பொழுது போக்காகக் கொண்டிருந்தார். கார்காலத்தில் ஒரு நாள் பசுக்களை மேய்க்கச் சென்றவர் பொன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தினைக் கண்டு அதனருகே சென்று புல்லாங்குழுலில் திருவைந்தெழுத்தை அமைத்து வாசித்தார்.

ஆனாயர் வாசித்த இனிய குழலோசை கேட்டு நிற்பன, நடப்பனவாகிய எவ்வுயிர்களும் தம்மை மறந்து அவ்விசைக்கு மயங்கின. அத்திருக்குழுலின் இசையினைச் செவிமடுத்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மீது அமர்ந்து விசும்பிலே தோன்றி அருட்காட்சியளித்து “என்றும் நம் சிவலோகத்தில் இருந்து புல்லாங்குழலூத நம் பால் அணைவாய்” என்று அருளிச்செய்ய ஆனாய நாயனாரும் சிவபெருமான் மருங்கு அணைந்து இன்புற்றிருந்தார்.

திருச்சிற்றம்பலம்