திருநாளைப்போவார் நாயனார்

     நந்தனார் என்னும் பெயருடைய இந்நாயனார் மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையிலுள்ள ஆதனூரில் ஆதி திராவிடர் குலத்திலே தோன்றியவர். அவ்வூரில் தமக்கு மானியமாக விடப்பட்ட நிலத்தின் விளைச்சலையே தமக்கு உரிய உணவு உரிமையாக கொண்டு தமது தொழில் முயற்சியால் சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய தோற்கருவிகளுக்குரிய தோலும் வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்பும் கொடுத்து வந்தார்.

திருக்கோயிலின் புறவாயிலில் நின்று அன்பின் மேலீட்டினால் சிவனைப் போற்றி இசையுடன் பாடுவதனை மரபாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் திருப்புன்கூர்ச் சிவலோகநாதர் கோயில் வாயிலில் நின்று இவர் இறைவனை இசையுடன் பாடிய போது இறைவன் நந்தியை விலகச் செய்து நேரே காட்சி கொடுத்தருளினார்.

திருப்புன்கூரில் சிவலிங்கப் பெருமானை நேரில் கண்டு கும்பிட்ட நந்தனார் அவ்வூரில் குளம் ஒன்று தோண்டினார். தில்லையைக் காண விரும்பி நாளைப் போவேன் நாளைப் போவேன் என்று ஆர்வமுடன் சொல்லி வந்த நந்தனார். ஒரு நாள் தில்லையை அடைந்து வலம் வந்தார். தில்லையில் கூத்தப்பெருமான் பணித்த வண்ணம் தில்லை அந்தணர் செய்த வேள்வித் தீயில் மூழ்கி மெய்யில் வெண்ணூல் விளங்க வேணி முடிகொண்டு வெளிப்பட்ட திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லைவாழ் அந்தனர் உடன்வரத் திருக்கோயில் கோபுரத்தை தொழது உள்ளே புகுந்தார்.

அம்பலவாணர் உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார். யாவரும் அவரைக் காணாதவராயினர். நந்தனாரது வினை மாசறுத்துத் தம்முடைய திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்க அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள் புரிந்தார்.

திருச்சிற்றம்பலம்