சண்டேசுர நாயனார்

பொன்னி வளந்தரும் சோழ நாட்டில் சேய்ஞலூரில் வேதியர் குலத்தில் எச்சதத்தன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவர் விசாரசன்மர். வேதங்களை நன்கு பயின்று சிறிய வயதிலே பேரறிவுடையராகத் திகழ்ந்தார்.

அவ்வூரில் பசுக்களை மேய்க்கும் ஆயன் என்பவன் பசுவை கடுமையாக அடித்ததைக் கண்டு மனம் வருந்தி, தாமே அப்பசுக்களை மேய்த்து வரலானார். எல்லாத் தெய்வநலங்களும் ஒருங்கே வாய்க்கப் பெற்று, இறைவன் திருமஞ்சனம் ஆடுதற்குரிய பால், தயிர், நெய் முதலியன அளிக்கும் பசுவின் பெருமையினை உணர்ந்து விசாரசன்மர் பசுக்களை அன்புடன் மேய்த்து வந்ததால், பசுக்களும் நன்கு மேய்ந்து கன்று வாய் வைக்காமலே தாமே பால் சொரிவனவாயின. வீடுகளிலும் நிறைப் பாலைப் பொழிந்தன.

அரனுக்குரிய பால் வீணாக கூடாது என எண்ணிய விசாரசன்மர் மண்ணியாற்றில் தென்கரையில் அத்திமரத்தடியில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பசுக்கள் சொரியும் பாலை இறைவனுக்குத் அபிடேகம் செய்து பூசை செய்து வந்தார்.

இவர் இவ்வாறு செய்வததை ஊரார் சிலர் இவருடைய தந்தை எச்சதத்தனுக்குச் சொன்னார்கள். அதனைக் கேட்ட தந்தை ஒரு நாள் இவர் செய்கையை நேரில் கண்டார். விசாரசன்மரைக் கோலால் அடித்தார். அவர் தம்மை மறந்து சிவபூசையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் தந்தை பால்குடத்தை காலால் இடறினார். பால் சிந்தியதை கண்ட விசாரசன்மர் அருகில் கிடைந்த கோலை எடுத்து தந்தையின் இரு கால்களின் மேல் வீசினார். அக்கோலே மழுப்படையாக மாறித் தந்தையின் கால்களை வெட்டிய நிலையில் அவர் இறந்தார்.

அப்போது சிவபெருமான் உமையம்மையாருடன் எழுந்தருளித் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய விசாரசன்மரை அன்புடன் அனைத்து, “நம்பொருட்டு உன்னை பெற்ற தந்தையை மழுவினால் எறிந்தாய். இனி உனக்கு அடுத்த தந்தை நாம்” என்று அருள்செய்தார். “நாம் சூடும் மலர்களும், உடுக்கும் ஆடைகளும் உண்ட பரிகலமும் உனக்கே ஆகுக” என்று கூறிச் சண்டீசப்பதமும் தந்தருளினார். சண்டீசவரபதத்தைப் அடைந்தமையால் இவர் சண்டேசுர நாயனார் எனப் போற்றப்பொறுகின்றார்.

திருச்சிற்றம்பலம்