திருநீலநக்க நாயனார்

சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் திருநீலநக்கர். அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரை வழிபாடு செய்து சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்து வந்தார்.

ஒரு நாள் அயவந்தியீசர் வழிபாட்டை முடித்து இறைவர் திருமுன் திருவைந்து எழுத்தினைச் செபித்தார். அப்போது சிலந்தி ஒன்று இறைவர் திருமேனி மீது விழுந்தது. உடனிருந்த மனைவியார் விரைந்து சென்று அதனைப் போக்கி இறைவர் திருமேனியில் வாயினால் உமிழ்ந்தார். அது கண்ட நீலநக்கர் மனைவியை நோக்கி “அநுசிதஞ் செய்தாய், அதனால் உன்னை துறந்தேன்” என்று கூறி இல்லத்திற்குத் திரும்பினார். அஞ்சிய மனைவியார் ஒரு பக்கம் விலகினார்.

அன்றிரவு நீலநக்கர் உறங்கும் போது அவர் கனவில் இறைவர் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி “உன் மனைவி உமிழ்ந்த இடம் தவிர எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளத்தைப் பார்” என்று சொல்லி மறைந்தருளினார். விழித்தெழுந்த நீலநக்கர் மனைவியார் இறைவன்பால் கொண்டிருந்த அன்பினை உணர்ந்து ஆயலத்திற்குச் சென்று மனைவியாரை இல்லத்திற்கு அழைத்து வந்தார்.

     திருஞானசம்பந்தர் அடியார் திருக்கூட்டத்துடன் சாத்தமங்கைக்கு எழுந்தருளிய போது எதிர்கொண்டு வரவேற்று திருவமுது படைத்து உபசரித்தார். பிள்ளையாருடன் வந்த திருநீலகண்டப் பெரும்பாணரும் அவர் மனைவியார் மதங்கசூளாமணியாரும் தங்குதற்குத் தம் இல்லத்தில் வேள்வி வளர்க்கும் பூசையறையைக் கொடுத்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமணத்தினைக் காண மனைவியுடன் சென்று திருமண வேள்விச் சடங்கினை முன்னின்று நிகழ்த்தித் திருநல்லூப் பெருமணத்தில் ஈறில் பெருஞ்சோதியில் உடன்புகுந்தார்.

திருச்சிற்றம்பலம்