ஏயர்கோன் கலிக்கா நாயனார்

சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்தில் ஏயர் கோக்குடியில் தோன்றியவர் ஏயர்கோன் கலிக்காமர். நம்பியாரூரர் பரவையார்பால் இறைவனைத் தூதாக் அனுப்பிய செய்தியைக் கேட்டுப் பொறாது மனம் வருந்திய கலிக்காமர் யான் சுந்தரனைக் கண்டால் என்னாகும் என்று வெகுண்டார்.

சுந்தரரையும் ஏயர்கொனையும் ஒன்றுபடுத்த திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் கலிக்காமர்க்குச் சூலை நோய்வருமாறு செய்து கலிக்காமரிடம் சென்று “இந்நோய் வன்தொண்டன் வந்தால் நீங்கும்” என்று கூறி வன்தொண்டரை ஏயர்கோனுக்குற்ற நோயைத் தீர்க்கும்படி அனுப்பியருளினார்.

தமது சூலை நோயை நீக்க வன்தொண்டர் வருவதனை அறிந்த கலிக்காமர் அவரால் நோய் தீர்வதிலும் தாம் இறத்தலே நன்றென்று, உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்து உயிர்துறந்தார்.

அந்நிலையில் அங்கு வந்த வன்தொண்டர் யானும் உயிர் துறப்பேன் என்று அவ்வுடையவாளை எடுத்தார். அப்போது கலிக்காமர் இறைவனருளால் உயிர் பெற்றெழுந்து அவ்வுடைவாளைப் பற்றிக் கொண்டு சுந்தரரது அன்பின் திறத்தை உணர்ந்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சுந்தரரும் ஏயர்கோன் கலிக்காமரும் திருப்புன்கூர் இறைவரைப் போற்றி ஆருயிர் நண்பராயினர்.

திருச்சிற்றம்பலம்