தண்டியடிகள் நாயனார்

திருவாரூரில் பிறந்த தவச்செல்வராகிய இவர். திருவாரூர்த் திருக்குளத்தினைச் சமணர்கள் வரவரத் தூர்த்துக் கொண்டு வருதலைத் தடைசெய்ய எண்ணினார். பிறவிக்குருடராகிய இவர் அக்குளத்தை ஆழப்படுத்தக் கருதித் திருக்குளத்தில் ஒரு தறியும் குளக்கரையில் ஒரு தறியும் நட்டு, அவற்றிடையே கயிறு கட்டி அக்கயிற்றைத் தடவிக் கொண்டெ குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டிக் கரையில் கொண்டு வந்து கொட்டினார். இவர் செயலை வெறுத்த சமணர்கள் மண்ணைத் தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துபடும் என்று கூறி தடுத்தனர். தண்டியடிகள் அவர்கள் பேச்சை கேளாது தமது பணியினைச் செய்ய முற்பட்டார். அந்நிலையில் சமணர்கள் தண்டிகளை நோக்கி “குருடா, செவியும் இழந்தனையோ” என இகழ்ந்தனர். அது கேட்ட தண்டியடிகள் வெகுண்டு “மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் உமக்கே உள்ளன” என்றார். அது கேட்ட சமணர்கள் “நீ உன் தெய்வத்தருளால் கண் பெற்றாயாகில் நாங்கள் இந்தவூரில் இருக்கமாட்டோம்” என்று சொல்லித் தண்டியடிகள் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்ட தறியையும் பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் அரசன் முன்னிலையில் திருக்குளத்தில் மூழ்கி இறைவனருளால் கண்ணொளி பெற்று எழுந்தார். சமணர்கள் யாவரும் கண்ணொளி இழந்தனர். அரசன் தண்டியடிகளுக்கு இடர் விளைத்த சமணர்களை ஊரைவிட்டு அகற்றினான். குளக்கரையினை அடைத்திருந்த சமணப்பாழிகளை இடித்துப் போக்கிக் குளத்தின் கரைகளைக் செம்மைப்படுத்தினான். தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் சிவப்பணிகள் பல புரிந்து இறைவனடி சேர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்