சிறுத்தொண்ட நாயனார்

நமக்குத் தனியே உண்ண ஒண்ணாது அருகில் அடியார் இருந்தால் அழையும்” என்றார். “வேறு அடியார் யாரையும் கண்டிலேன், யானம் திருநீறு இடுவாரைக் கண்டு பூசிய அடியவன்” என்றார் சிறுதொண்டர். “உம்மைப் போல நீறிட்டார் உளரோ? நீரும் என்னுடன் இருந்து உண்பீர்” எனக் கூறிய பயிரவர் வெண்காட்டு நங்கையாரை நோக்கி வேறொரு இலைபோடச் செய்து, அதன்கண் வெம்மையிறைச்சிச் சோற்றை எடுத்துப் படைக்க என அவ்வாறே செய்தார். அருகே உண்ண அமர்ந்த சிறுத்தொண்டர் அடியாரை உண்பித்தல் வேண்டித் தாம் உண்ணத் தொடங்கியதும், பயிரவ அடியார் அவரைத் தடுத்து “நம்முடன் உண்ண மகவினைப் பெற்றீராயின் மைந்தனை அழையும்” என்றார். அது கேட்ட சிறுத் தொண்டர் “இப்போது அவன் உதவான்” என்றார். நாம் இங்கு உண்பது அவன் வந்தால்தான். அவனை நாடி அழைப்பீர்” எனப் பணித்தார் பயிரவர். சிறுத்தொண்டரும் மனைவியாரும் புறத்தே போய் அழைக்கும் போது சிறுத் தொண்டர் “மைந்தா வருக” என அழைத்தார். “சிவனடியார் உடன் உண்ண அழைக்கின்றார் சீராளா வாராய்” என அழைத்தார் வெண்காட்டு நங்கையார். அப்போது இறைவர் திருவருளால் பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவருபவனைப் போன்று வந்த புதல்வனைத் தழுவி எடுத்துக் கொண்டு அடியாரை அமுது செய்வித்தல் வேண்டி வெண்காட்டுநங்கையும் சிறுத்தொண்டரும் வீட்டினுள்ளே புகுந்தனர். அந்நிலையில் பயிரவராய் வந்த அடியார் மறைந்தார். அவர்க்குப் படைத்த இறைச்சியுணவும் காணப்படவில்லை. அப்பொழுது மறைந்த சிவபெருமான் உமாதேவியாருடனும் முருகப் பொருமானுடனும் விடைமீதமர்ந்து இனிய கறியும் திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் தருவருள் நோக்கம் செய்தருளினார். சிவபெருமானும் உமையம்மையும் முருகப்பெருமானும் தம்மை வணங்கி நின்ற சிறுத்தொண்டர், வெண்காட்டுநங்கையார், சீராள தேவர், சந்தனத்தாதியார் ஆகிய நால்வரையும் தம்மை என்றும் பிரியாது வணங்கி மகிழ்ந்திருக்கும் வண்ணம் உடன் அழைத்துக்கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்