சேரமான்பெருமாள் நாயனார்

மலைநாட்டில் கொடுஞ்கோளுரில் சேரர்குடியிலே பெருமாக்கோதையார் பிறந்தருளினார். முடிவேந்தர் குடியில் பிறந்த இவர் தமக்கு உரிய அரசுத் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளையே பரவும் கருத்துடையராயத் திருப்பணிகள் பல புரிந்து ஒரு நெறிய மனத்தினால் அருச்சித்து வழிபாடு புரிந்தனர். அங்ஙனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையன் அரசு பதவினைத் துறந்து தவம் செய்யச் சென்றார். அவரையடுத்து நாடாளுரிமைமுறையினர் பெருமாக்கோதையார் என உணர்ந்த அமைச்சர்கள் திருவஞ்சைக்களத் திருக்கோயிலில் உள்ள பெருமாக்கோதையாரைப் பணிந்து சேர நாட்டு ஆட்சியுரிமையினை ஏற்றளும்படி வேண்டினர். இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூராக இவர் மொழிந்தார். என எண்ணிய பெருமாக்கோதையார் அஞ்சைக்களத்து இறைவனைப் பணிந்து உலகில் யாரும் யாவும் கூறின எல்லாவற்றையும் கூறுவனவற்றை உய்த்துணரும் நுண்ணுணர்வும் கெடாத தருகண்மையும் தளராக கொடைவண்மையும் வேண்டிப் பெற்றார். கழறிற்றவாராகிய இவர் சேரநாட்டின் அரசராக முடிசூடிப் பட்டத்து யானை மீது அமர்ந்து திருவுலாப் போந்தார். அப்போது உவர்மண் பொதியைத் தோளில் சுமந்து வரும் வண்ணானைக் கண்டு திருநீறு பூசிய அடியார் எனக் கருதி யானை மீதிருந்தும் வணங்கினார். அரசர் தன்னை வணங்கக் கண்டு அஞ்சிய வண்ணான் யாரென்று அடியேனைக் கருதியது? ”அடியேன் அடித்தொழில் புரியும் வண்ணான்” என்றான். அதுகேட்ட சேரமான் ”அடியேன் அடிச்சேரன், திருநீற்றின் அன்பர் திருவேடத்தை நினைப்பித்தீர், வருந்தாது செல்வீராக” என அவ்வண்ணானுக்குத் தெறுதலுரை பகர்ந்து அனுப்பினார்.

கூத்தப்பெருமானது எடுத்து திருப்பாதத்தினை நாள்தோறும் வழிபடுதலைத் தமக்குரிய கடமையாகக் கொண்டிருந்த சேரமான் பெருமான் பூசை முடிவில் இறைவனது திருவடிக் சிலம்பொலியினைச் செவிகுளிரக் கேட்டு மகிழ்ந்தார். சிவனடியார்களுக்கு வரையாது வழங்கியும் சிவவேள்விகள் செய்தும் எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார். தன்னை யாழிசையாற் பரவும் பாணபத்திரரது வறுமையைப் போக்கத் திருவுளங்கொண்ட மதுரைத் திருவாலவாய் இறைவர் ”மதிமலி புரசை” எனத் தொடங்கும் திருமுகப்பாசுரம் எழுதிய ஓலைப்பாயிரத்தைப் பாணர் கையில் கொடுத்துஅனுப்பினார். பாணர் தந்த திருமுகத்தைப் பெற்ற சேரமான்  அவர் வேண்டும் பொருள்களை எடுத்துக் கொள்ளும்படி வேண்டி வேண்டும் பொருளைக் கொடுத்தனுப்பினார்.

     கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் என்றும் போல் ஒரு நாள் சிவபூசை செய்து கொண்டிருந்த போது பூசை முடிவில் கேட்டு இன்புறுவதாகிய சிலம்பொலியைக் கேட்கப்பெறாது தம் உயிரைப் போக்கிக் கொள்ளத் தம் உடைவாளை உருவினார். அந்நிலையில் கூத்தப்பெருமான் விரைந்து தமது திருவடிச்சிலம்பொலியை ஒலிக்கச் செய்து அருளினார். “சேரனே, தில்லையிலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் திருப்பதிகம் பாடி நம்மைப் பரவினான். அவன் பாடிய தீஞ்சுவைப்பாடலில் நாம் திளைத்திருத்தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய  நேரத்தில்வரத் தாழ்த்தோம்” எனத் தோன்றிய இறைவனது அருள்வாக்கினை செவிமடுத்த சேரமான்பெருமாள் நாயனார் தில்லையம்பலத்தில் அருட்கூத்தினை வணங்கி வன்றொண்டரையும் கண்டு வழிபட விரும்பினார். சேர நாட்டிலிருந்து புறப்பட்டுக் கொங்குநாடு கடந்து சோழநாட்டை அடைந்தார். காவிரியில் நீராடினார். தில்லை மூதூரை அடைந்து திருக்கூத்துத் தரிசனங்கண்டு பொன்வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். திருவாரூரை அடைந்து வன்றொண்டரைக் கண்டு புற்றிடங்கொண்ட பெருமானைப் பணிந்து திருமும்மணிக்கோவை பாடினார். நம்பியாரூராடுன் திருமறைக்காடு முதலிய தலங்களை வழிபட்டுப் பாண்டி நாட்டை அடைந்து மதுரைத் திருவாலவாய்ப் பெருமானைப் போற்றினார். பாண்டித்வேந்தனும் பாண்டிய மன்னன் மகளை மணந்து மதுரைக்கு வந்திருந்த சோழமன்னனும் தாமுமாக முடிவேந்தர் மூவருடன் சுந்தரர் திருப்பரங்குன்றப் பெருமானைப் பாடிப்போற்றி மகிழும் நிலையில் அன்பினால் அளவாளவி மகிழ்ந்தார். வன்றொண்டருடன் சோழ நாட்டை அடைந்தார். பரவையார் இசைவு பெற்று வன்றொண்டரை மலை நாட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினார். திருவஞ்சைக்களத்தில் இறைவரை வழிபட்ட சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளையானை மீது அமர்ந்து செல்லும் போது தம் அன்புடையத் தோழராகிய சேரமானைத் தம் நெஞ்சத்தில் நினைத்துச் சென்றார். திருமஞ்சன சாலையில் இருந்த சேரமான் அதனை உணர்ந்து தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தினை உபதேசித்தார். சேரமான் ஊர்ந்த குதிரை விசுப்பிச் சென்று வன்றொண்டர் ஏறிச் செல்லும் வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே சென்றது. சேர வேந்தரைத் தொடர்ந்த வீரர்கள் தம் உடைவாளினால் தம் உடம்மை வெட்டி வீழ்த்தி வீரயாக்கை பெற்று முன் சென்றனர். திருக்கயிலை வாயிலில் சேரமான் பெருமாள் தடைப்பட்டு நின்றி நிலையில் அவர் தம் உயிர்தோழர் நம்பியாரூரர் இறைவனை இறைஞ்சித் சேரர் பெருமானை உள்ளே அழைத்து வரும்படி இசைவு பெற்றனர். சேரமான் பெருமாள் நாயனார் தாம் பாடிய திருக்கயிலாய ஞானவுலாவைக் கயிலைப்பெருமான் திருமுன்னர் அரங்கேற்றினார். பின்பு சேரமான் பெருமாள் சிவகணத்தலைவராகத் திருக்கயிலாயத்தில் திருத்தொண்டு புரிந்திருந்தார்.

திருச்சிற்றம்பலம்