கூற்றுவ நாயனார்

களந்தை என்னும் ஊரிலே குறுநில மன்னர் குடியிலே தோன்றியவர் கூற்றுவ நாயனார். திருவைந்தெழுத்தை நாளும் ஓதிச் சிவனடியார்களை வழிபடும் இயல்புடையய இவர் வேந்தர் பலரோடும் போர் புரிந்து வாகை மாலை புனைந்தவர். அரசர்க்குரிய முடி புனைதல் ஒன்றும் நீங்கலாக அரசியல் அங்கங்களை அனைத்தும் பெற்ற கூற்றுவ நாயனார் தில்லைவாழ் அந்தணைரை அடைந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினார். தில்லைவாழ் அந்தணர்கள் சோழ மன்னருக்கு அன்றி வேறு எவர்க்கும் முடி சூட்டமாட்டோம் என்று கூறி முடியைக் காத்துக் கொள்ளும்படி ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சேரநாட்டை அடைந்தார்கள். கூற்றுவனார் தில்லையம்பலவரை மனங்கொண்டு “அடியேன் நின் திருவடிப் போதினை முடியாகப் பெறுதல் வேண்டும்” எனக் கூத்தப்பெருமானை வேண்டித் துயில் கொண்டார். அந்நிலையில் கூத்தப்பெருமான் கூற்றுவநாயனார் கனவில் தோன்றித் தம்முடைய திருவடியை  முடியாகக் சூட்டியருளினார். அம்பலதிருவடியை முடியாகத் தாங்கிய கூற்றுவ நாயனார் திருத்தலங்கள் தோறும் சிவபெருமானை வழிபட்டு நாட்டினை நீதிமுறையில் ஆட்சி புரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்