நரசிங்கமுனையரை நாயனார்

திருமுனைப்பாடி நாட்டினைத் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் நரசிங்கமுனையரையர். முனையரையார் குடியிற்பிறந்த இவர் பகைவரைப் புறங்கண்ட பெருவீரர். சிவபெருமான் திருக்கோயில் தோறும் செல்வம் பெருகத் திருத்தொண்டுகள் பல புரிந்தவர். திருவாதிரை நாள்தோறும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து ஒவ்வொருவர்க்கும் நூறு பொன் வழங்கி வந்தார். ஒரு நாள் தூர்த்த வேடமுடைய ஒருவர் திருநீறு அணிந்து அடியார் கூட்டத்திற் சேர்ந்து வந்தார். அவருடைய தூர்த்த வேடத்தைக் கண்டு அருகே நின்றவர்கள் இகழ்ந்து ஒதுங்கினர். அது கண்ட நரசிங்கமுனையரையர் அவ்வடியவரை எதிர் சென்று வணங்கி உபசரித்தார். சீலமில்லாதவர்களேயானாலும் திருநீறை அணிந்தாரை உலகத்தார் இகழ்ந்து நரகத்தில் விழாதபடி அவ்வடியர்க்கு இருநூறு பொன் கொடுத்து இன்மொழி பகர்ந்து அனுப்பினார். இவ்வாறு திருந்திய சிந்தையராய்த் திருத்தொண்டு பல புரிந்த நரசிங்க முனையரையர் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.

திருச்சிற்றம்பலம்